ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி விசிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வன்னியரசு உள்ளிட்ட விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விசிக தலைவர் திருமாவளவன் மெழுகுவர்த்தி தீபச்சுடரை ஏற்றியும், மலர் தூவியும் போரில் மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், 'தெற்கு ஆசியாவில் இந்திய வல்லரசாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றுதான் ஈழத்தமிழர்களின் பிரச்னைக்காக வெளியுறவுக் கொள்கையை இந்திரா காந்தி வரையறுத்தார்.
இது ஏதுவும் தமிழர்கள் மேல் உள்ள அக்கரை, அன்பினால் இல்லை. அந்தக் காலத்தில் இருந்த உலக சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டார். ஈழத்தமிழர்கள் பிரச்னையை வெறும் இனம், மொழி, உணர்வு பிரச்னையாக பார்த்து கடக்க முடியாது. இதில் உலக அரசியல் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டை காங்கிரஸ் அல்லது பாஜக யார் ஆட்சி செய்வது என்பது இல்லை பிரச்னை. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு நிலையான கொள்கையை இந்த நாடு வகுக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.
ஈழத்தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு தனி ஈழம் மட்டுமே ஆகும். இதற்கு கூட்டணி கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், ஏன் ஈழத்தமிழர்களே தற்போது இதை பற்றி பேசாமல் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை தனி ஈழமே நிரந்தரத் தீர்வாகும். ஏனென்றால் அங்கு தமிழர்கள், சிங்களர்கள் எந்த சூழ்நிலையிலும் ஒன்றுபட்டு வாழ முடியாது அந்த அளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது.
நாதுராம் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கூறிய கமல், ஒருப்படி மேலே போய்- நாதுராம் கோட்சே ஒரு பயங்கராவாதி என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் ஆங்கிலத்தில் தீவிரவாதி என்றால் எக்ஸ்ட்ரிமிஸ்ட் (Extremist), பயங்கரவாதி என்றால் டெரரிர்ஸ்ட் (Terrorist) ஆகும்.
நான் சொல்கிறேன் காந்தி அடிகளே ஒரு இந்து தீவிரவாதிதான். காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி ஆவார். இதை நான் சொல்வதற்கு இந்து மதம் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை. இது வரலாறு ஆகும்' எனத் தெரிவித்தார்.