சென்னை: வேங்கை வயல் விவகாரம் குறித்து தொல். திருமாவளவன் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, "திமுககாரர் போல, பேசாதீங்க" என்ற செய்தியாளர் ஒருவருக்கு "செய்தியாளர்கள் கேள்வியை அநாகரிகமாக உள்நோக்கத்துடன் கற்பனையாக கேள்வி கேட்கக்கூடாது" என திருமாவளவன் ஆவேசமாகப் பதிலளித்தார். மேலும், திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசை எதிர்த்து, அதிக போராட்டம் நடத்தியது விசிக தான் என்றும் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு (L.Elayaperumal) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனிடையே இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஏப்.19) சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.இளையபெருமாளுக்கு நினைவரங்கம் (Ilayaperumal Centenary Memorial) ஒன்றை சிதம்பரம் நகரில் அமைக்கப்படும் என்று நேற்று முதலமைச்சர் அறிவித்துள்ளதற்கு விசிக சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்’ என்றார்.
மேலும் பேசிய அவர், ’ஜவஹர்லால் நேரு அவர்களின் காலத்தில் இருந்து தேசிய அளவில் அரசியலில் ஈடுபாடு கொண்டவர், தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் பழங்குடி மக்களின் வாழ்க்கை நிலைகளை ஆராய்ந்து இந்திய ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்தவர் எல்.இளையபெருமாள் என்றார். அவருடைய பெயரிலேயே இளையபெருமாள் கமிட்டி நிறுவப்பட்டது.
அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. என்றைக்கும் அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியினரின் பாதுகாப்புக்கு அவர்களின் நலன்களின் மீதான அரசின் திட்டங்களுக்கு இந்த கமிட்டியின் பரிந்துரை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
தேசிய அளவில் அவருடைய பங்களிப்பை போற்றக்கூடிய வகையிலும் தமிழக அளவில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஒட்டுமொத்த உழைக்கிற மக்களின் நலங்களுக்காகவும் பாடுபட்ட அவருடைய பங்களிப்பை போற்றுகிற வகையிலும் முதலமைச்சர் அவருடைய நினைவாக சிதம்பரத்தில் இந்த நூற்றாண்டு அதாவது ஜூன் 23 அவருடைய நூற்றாண்டு வருகிறது.
அந்த நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைப்பதற்கு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தற்போது இன்னும் சில நிமிடங்களில் தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையிலே முதலமைச்சர் முன்மொழிய நிறைவேற்றப்பட இருப்பதாக பேசிய அவர், இதுவும் நீண்ட காலத்திற்கு இந்திய ஒன்றிய அரசு தலித் கிறிஸ்தவர்களை அதாவது ஆதிதிராவிட அதாவது பட்டியல் இனத்தில் இணைப்பது அவ்வாறு இணைக்க வேண்டும் என்றார். மேலும், அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற வகையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த தமிழ்நாடு அரசு முன் வந்திருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை, முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்தோம். துணை திட்டங்களுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதனையும் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்திருக்கிறார். அடுத்த கூட்டத்தொடரில் அது சட்டமாக்கப்படும் என்கிற உறுதியும் அளித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது நம்பிக்கையை தருகிறது, ஆகவே, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறோம்.
அத்துடன் மீனவர்கள் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மெரினா கடற்கரை ஓரத்தில் இருந்து பட்டினப்பாக்கம் அருகிலான லூப் சாலையிலே அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நள்ளிரவு அவர்களை சந்தித்து நான் பேசினேன். இன்றைக்கு அது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. விவாதிக்க இருக்கிறோம் என்று கூறினார். ஏற்கனவே, இவை குறித்து அதிகாரிகளோடு கலந்து பேசியதாகும் தெரிவித்தார்.
நீதிமன்றத்திலும் மீனவர்கள் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தக் கூடிய வகையில் அரசு தரப்பில் பேச இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். எனவே, மீனவர்கள் அதே பகுதியிலேயே மீன் பிடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலே வியாபாரம் செய்வதற்கு, ஏதுவாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் என்றார். மேலும், இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது. அரசை என்ன உண்மை அங்கு நிலவுகிறதோ அந்த உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நொச்சிக்குப்ப மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலே, வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைக் கட்சிகளின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேங்கை வயல் விவகாரத்தில், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'அது குறித்தும் முதலமைச்சரிடம் பேசியுள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், அதற்கு குறித்த காலக்கெடு எதுவும் நாம் நிர்ணயிக்க முடியாது' எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், "நீங்க திமுகவினர் போன்று பேசுகிறீர்கள்" என கேட்க, கோபமடைந்த தொல்.திருமாவளவன், "பத்திரிகையாளர்கள் நாகரிகமாக கேள்வி கேட்க வேண்டும் எனவும்; அநாகரிகமாக கேள்வியை கேட்கக்கூடாது" எனவும் காட்டமாக கூறினார். "நானும் கையை கட்டிட்டு குனிஞ்சிட்டு பேசணுமா என்றும்; இந்த வீரத்த மத்த இடத்தில காட்டுங்க" எனவும் செய்தியாளர் சந்திப்பில் கடுப்பாக திருமாவளவன் பேசினார்.
மேலும், திமுக கூட்டணியிலேயே இருந்தாலும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் அரசை எதிர்த்து நடத்தி இருப்பதாகவும் நாளை கூட போராட்டம் நடைபெற இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். பின்னர் திமுககாரன் போல, செயல்படுவதாக கூறுவது அநாகரிகம் என பேசிய அவர் அதற்கு தனது கண்டனத்தை செய்தியாளருக்கு தெரிவித்ததோடு, பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திச் சென்றார்.
இதையும் படிங்க: ’வேங்கைவயல் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது’ - திருமாவளவன்