சென்னை: பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் தேனாம்பேட்டையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியாத்துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் உள்ளிட்டவர்களும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலக வங்கியின் நிதியில் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026ஆம் ஆண்டில் முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. அதற்கான பயிலரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "திமுக ஆட்சியில் தான் 2ஆவது முழுமை திட்டம் துவங்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த பயிலரங்கம் உபயோகப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப அடைப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அந்த வகையில் அரசு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சென்னை சுற்றுப்புறத்தில் உள்ள நீர் நிலைகளை தனி கவனம் செலுத்த வேண்டும்.
வனத்துறை பகுதிகளில் பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகளை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் செய்திட வேண்டும்" என கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, "அரசால் எடுக்கப்படும் தொலைநோக்கி திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்பது மிகவும் முக்கியமான ஒன்று. மூன்றாம் முழுமை திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையை தடுக்க முடியும். சென்னையில் அண்ணா சாலை போன்ற 10 முக்கிய சாலைகள் அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றவுள்ளது. அப்பணிகள் நடைபெரும் பொழுது நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மூன்றாம் முழுமை திட்டம் அமையும்.
மூன்றாம் முழுமை திட்டம் குறித்து தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் சென்னை மாநகராட்சியில் செய்யப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அரசிடம் நேரடியாகவே கருத்துக்களை தெரிவிக்கலாம். திட்டமிடாத காரணத்தினாலேயே நகரங்களில் சாலை நெரிசல்கள் ஏற்படுகிறது. மூன்றாம் முழுமை திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும்.
நாடிவரும் பொதுமக்களுக்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கான ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்பெறக்கூடிய திட்டங்களை தற்போது மூன்றாம் முழுமை திட்டம் மூலம் துவங்கப்படவுள்ளது. மழை நீர் தேங்குவதை முழுமையாக தடுக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தி வருகிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: இன்ஃப்ளுயன்ஸா பதற்றம் வேண்டாம்..வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்