சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தது.
வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளில் அறிவிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.
ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் உயர்வு
இந்நிலையில் இன்று (செப்.4) சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், “திருக்கோயில்களில் உள்ள உண்டியல்கள், ஆபரணங்களை பாதுகாக்கும் வகையில், அமைக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு படை எனும் தனிப் பிரிவில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,500 மாத தொகுப்பூதியமானது, தற்போது ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 47 முதுநிலை திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் எண், பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் அறிவிப்பு பதாகைகளில் இடம் பெறும்.
தொடர்ந்து அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் 108 போற்றிகள் அடங்கிய நூல்கள் திருக்கோயில்களில் கிடைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து!