கரோனா வைரஸ் சென்னை முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி, அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வராத வண்ணம் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அப்படி பாதிக்கப்பட்ட பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும், குடியிருப்பு பகுதிகளையும் இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் நுங்கம்பாக்கம் காமராஜபுரம் மூன்றாவது தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் உள்ள அதிகாரிகளுடன் அந்தப் பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.
பின்னர் கரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ள சூளைமேடு காவல் நிலைய சௌராஷ்டிரா நகர், ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈஸ்வரர் கோயில் தெரு, கடைசியாக கோட்டூர் புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஐஐடி வளாகத்திற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது இணை ஆணையர் சுதாகர் தர்மராஜ் உள்ளிட்ட பல காவல் அதிகாரிகள் இருந்தனர்.