ஜூலை மாதம் புதிய வாகன மோட்டார் வாகன சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், காப்பீட்டு நகல் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2ஆயிரம், அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கும் கடுமையான அபராதம், அதிக வேகத்தில் சென்றால் ரூ.1,000 முதல் ரூ .2,000 வரை, சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000,ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பாதுகாவலனும், வாகனத்தின் உரிமையாளரும் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். அப்படி செய்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். வாகனங்களில் அதிக அளவில் சுமை கொண்டு சென்றால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கலாம் எனவும் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதைத் தொடர்ந்து புதிய விதிகள் அமலில் வந்ததால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று முதல் சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறையில் வந்துள்ளது. இதையறியாமல் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபருக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ரசீது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.