சென்னை: முடிச்சுகள் அவிழாத மர்மங்கள் வரலாற்றின் தேடல்களில் தொடர்ந்து வருபவை. பேரழகோடு பயணித்து வரும் மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மனித மனம் தயங்குகிறது-மாறாக விடைகாணா புதிர்களில் தன்னைப் புதைத்துக் கொள்வதிலேயே லயித்திருக்கிறது. தலைமுறைகள் கடந்து, கனவுக் கன்னியாக விளங்கும் மர்லின் மன்றோவின் வாழ்வும், சாவும் இதற்கு சான்று. மர்லின் மன்றோவின் வாழக்கையில் இன்றளவும் விடைகாணப்படாத பல மர்மங்கள் உள்ளன.
முற்றுப் பெறாத ஏக்கமும், தவிப்பும், நினைவையும் நிகழ்காலத்தையும் பசுமையாக்குகின்றன. மன்றோவின் அந்த ஸ்கர்ட் பறக்கும் காட்சியை யாரும் மறக்க முடியுமா? - 'ஏழுவருட ஏக்கம்' (The Seven Year Itch) திரைப்படத்தில் வரும் அந்தக் காட்சி மட்டுமல்ல, அவரது பாத்திரப் படைப்பே பார்வையாளர்களைக் மெய்மறக்கச் செய்யும். மகிழ்ச்சி ததும்பும் இயல்பான நடிப்பால், திரைக்கதையின் கட்டுக்களை எளிதாகக் கடந்து, ஹாலிவுட்டில் தனி முத்திரை பதித்துள்ளார். ஆனால், வெள்ளித்திரைக்கு அவர், அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. வந்த பின்னும், அவருக்கான சம்பளம் சொற்பமே.
1953ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'ப்ளேபாய்’-ன் முதல் இதழில் முழு நிர்வாண போஸ் கொடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தார் மன்றோ. அந்தப் படத்திற்கு, மர்லின் பெற்றது வெறும் 50 டாலர் மட்டுமே. ஆனால், ப்ளேபாய் ஆசிரியர் ஹ்யூ ஹெஃப்னர் அதனை 500 டாலருக்கு வாங்கினார். பிறகு, தன்னை நிராகரித்த லைஃப் இதழின் அட்டைப்பட நாயாகியாகவும் ஆனார்.
அரை நூற்றாண்டுக்கு முன் அமெரிக்க அதிபர் முதல், டூரிங் டாக்கீஸ் ரசிகன் வரை, கோடிக்கணக்கானோரின் கற்பனை உலகில் தேவதையாக வலம் வந்தார் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ. அவர் இன்றும் ரசிகர்களுக்கு ஒளிவீசும் தாரகைதான். ஆனால், குழந்தைப் பருவத்தில் இருந்தே அவருக்கு வாழ்க்கை சவாலானதாகவே இருந்தது.
லாஸ் ஏஞ்சலீஸில் 1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த மர்லினுக்கு தந்தை இல்லை. தாய்க்கோ மன நலப் பிரச்சனைகள். ஆகையால், ஆதரவற்றோர் இல்லங்களிலேயே வளர்ந்தார். 16 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்தார். நடிகையான பிறகு இரண்டு திருமணங்கள், இரண்டும் தோல்வி. குழந்தை இல்லை, தனிமையான வாழ்க்கை.
கல்லூரியில் படிக்காதவர், ஆனால் வீட்டில் தனி நூலகமே வைத்திருந்த அவருடைய இலக்கிய வாசிப்பு பிரமிக்க வைப்பது. கவிதை எழுதும் மர்லினுக்கு இசையில் மிகுந்த நாட்டம் உண்டு. ஒப்பனைகள் செய்து கொள்ள விரும்புவார். லிப்ஸ்டிக், மஸ்காரா போன்றவை மிகமிகப் பிடிக்கும். ஆனால், ஆபரணங்களில் ஆர்வம் இல்லாதவர். இவருக்கு நாய்கள் மீது கொள்ளைப் பிரியம். சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
மர்லின், அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மீது சிறுவயதில் இருந்தே தீவிரமான பற்று கொண்டிருந்தார். அவரை தனது தந்தை என்றே போற்றினார். லிங்கனைப் பற்றிய ஆய்வாளர் என்ற அளவுக்கு அவரைப் பற்றிய ஆவணங்களையும் நூல்களையும் தேடித் தேடி சேகரித்தார். லிங்கனைப் போலவே நிறவெறிக்கு எதிரான செயல்பாட்டாளராக, மக்களின் உரிமைகளுக்கான ஆதரவாளராக இருந்தார்.
அவருடைய கருத்துகள், செயல்பாடுகள் எல்லாமே அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தன. "ஒரு பெண்ணின் அழகான உடல் மூடி மறைப்பதற்கல்ல; மற்றவர்கள் பார்த்து ரசிக்கவே. ஹாலிவுட் என்பது ஒரு பெண்ணின் முத்தத்துக்கு 50 ஆயிரம் டாலர்களும், அவள் மனசுக்கு வெறும் 50 செண்ட்டும் தரக் கூடியது. ஆண்களுக்கு பெண்கள் புத்தகம் போல. அட்டை ஈர்க்கவில்லை என்றால், உள்ளே போக மாட்டார்கள்" என்று மர்லின் கூறியுள்ளார்.
மூன்றாவது கணவரான பிரபல இலக்கிய படைப்பாளர் ஆர்தர் மில்லரை விவாகரத்து செய்த பின்னரும், அவரை அமெரிக்க அரசு இடதுசாரி செயல்பாட்டாளர் என வழக்கு தொடுத்து அலைக்கழித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று ஆதரவு கொடுத்தார். தேவையான பண உதவியும் செய்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மர்லின் மன்றோவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1962ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஜான் எஃப் கென்னடியின் 45வது பிறந்த நாள் விழாவில், கவர்ச்சியான உடையில் வந்து 'ஹேப்பி பர்த்டே டு பிரெஸிடெண்ட்' பாடலை மர்லின் பாடினார்.
அப்போது, "மன்றோவின் குரலால் வாழ்த்து பெற்ற பிறகு, இன்றுடன் நான் பதவியில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாம்" என்றார் கென்னடி. அடுத்து, இரவு நடந்த விருந்திலும் மர்லின் கலந்து கொண்டார். அன்றைக்கு அவர் அணிந்திருந்த உடை அவரது மரணத்துக்குப் பிறகு, 12 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.
தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தொடர் தோல்விகள், மன்றோவை மதுப் பழக்கத்துக்கும், போதைப் பழக்கத்துக்கும் தள்ளியது. இதனால் தொழிலில் கவனம் சிதறியது. சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார். மன அழுத்தத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சில முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.
மர்லின் மன்றோ மரணம்:
போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த மர்லின் மன்றோ, புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்தபோதே மறைந்தார். கடந்த 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் மர்லின் மன்றோ தன் படுக்கையறைக் கட்டிலில் நிர்வாணமாக, கையில் தொலைபேசியின் ரிசீவரைப் பிடித்தபடி மூச்சில்லாமல் கிடந்தார். மருத்துவர் அழைக்கப்பட்டு, கண்ணாடி ஜன்னலை உடைத்து உள்ளே சென்று முதலுதவி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
மருத்துவப் பரிசோதனையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது. ஆனால், இந்த மரணம் குறித்து சர்ச்சைகளும், பதில் இல்லாத பல கேள்விகளும் தொடர்கின்றன. அது ஒரு திட்டமிட்ட கொலை என்கிற கோணத்தில் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல தொலைக்காட்சிகள் தங்கள் குழுவை வைத்து துப்பறிந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.
ஊகங்கள்: ஊடகங்களின் ஊகங்கள்படி, "அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் மன்றோவுக்கும் காதல் ஏற்பட்டது. நடிகரும், கென்னடியின் மைத்துனருமான பீட்டர் லாஃபோர்டின் வீட்டில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதிபர் கென்னடி தன் மனைவி ஜாக்குலினை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்வார் என்று மன்றோ நம்பினார். ஆனால், அதிபர் தன் சகோதரர் ராபர்ட் கென்னடியை அழைத்து மன்றோவைச் நேரில் சந்தித்து, 'இனிமேல் வெள்ளை மாளிகைக்கு போன் செய்யக்கூடாது, தன்னை அழைக்கக்கூடாது' என்று தெரிவிக்கச் சொன்னார். எச்சரிக்கை செய்வதற்காக சென்ற ராபர்ட்டுக்கு மன்றோவைப் பிடித்துவிட்டது. ராபர்ட்டுடன் மன்றோவுக்கு புதிய காதல் ஆரம்பித்தது. ராபர்ட்டுக்கும் மன்றோவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இல்லை.
மன்றோ, 'உங்கள் இருவரைப் பற்றிய ரகசியங்களை செய்தியாளர்களிடம் பகிரங்கப்படுத்துவேன்' என்று ராபர்ட்டை மிரட்டினார். மன்றோ இறந்த தினத்துக்கு முதல் நாள் மன்றோவுக்கும் ராபர்ட் கென்னடிக்கும் வாக்குவாதம் உச்சத்துக்குச் சென்றது. அருகில் பீட்டர் லாஃபோர்டும் இருந்தார். கோபத்தின் உச்சத்தில் மன்றோ கத்தி எடுத்து ராபர்ட் கென்னடியைக் குத்த முற்பட்டார். கத்தி வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டது. அவருக்கு சில குறிப்புகள் தந்து விட்டு கென்னடியும், பீட்டர் லாஃபோர்டும் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அடியாட்களின் உதவியுடன் சென்ற மருத்துவர் மன்றோவை நிர்வாணப்படுத்தி எனிமா மூலம் உயிரைப் போக்கும் அளவுக்கு தூக்க மாத்திரைகளைச் செலுத்தினார். பின்னர் மன்றோவை கட்டிலில் படுக்க வைத்து தற்கொலை போல நாடகமாடினார்கள்".
ஊகங்களை உறுதி செய்யும் விஷயங்கள்: இந்த ஊகங்களை உறுதி செய்ய பல காரணங்கள் இருந்தன. அந்தப் படுக்கையின் விரிப்பு கலையாமல் இருந்தது. மேஜையில் காலியாக இருந்த மாத்திரை பாட்டிலின் மூடி சரியாக மூடப்பட்டிருந்தது. மாத்திரைகளை விழுங்க ஒரு கண்ணாடி டம்ளரோ, தண்ணீரோ, மது வகைகளோ எதுவும் அங்கு இல்லை.
ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டபோது மருத்துவர் க்ரீன்சன், மன்றோவுக்கு முறையான முதலுதவிகள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கைப்படி மன்றோ வயிற்றில் கிட்டத்தட்ட 60 மாத்திரைகள் இருந்தன. அது வாய்வழியாக உட்கொள்ளப்படவில்லை. அதேபோல், மன்றோவின் மரண வழக்கு விசாரணைத் தொடர்பான பல மருத்துவ அறிக்கைகளும், விசாரணை அறிக்கைகளும் பின்னர் காணாமல் போயின.
மன்றோவின் உதவியாளர் முர்ரே கடந்த 1985-ல் பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், போலீஸிடம் தெரிவித்ததையே சொல்லிவிட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டதும் மைக் அணைக்கப்படாததைக் கவனிக்காமல் சலிப்புடன், "இந்த வயதிலும் நான் பொய் சொல்ல வேண்டுமா? மன்றோவுக்கு இரண்டு கென்னடிகளோடும் தொடர்பு இருந்தது" என உளறிவிட்டார். கடந்த 2014-ல் வெளியான 'தி மர்டர் ஆஃப் மர்லின் மன்றோ' என்ற புத்தகம் விற்பனையில் சாதனைப் படைத்தது. இதில், பீட்டர் லாஃபோர்ட் மனம் விட்டு சொன்ன பல ரகசிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மன்றோவை மனசுக்குள் காதலித்தவர்கள் பலர். ப்ளேபாய் பத்திரிக்கையின் ஆசிரியரான ஹ்யூ ஹெஃப்னர், மன்றோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் மன்றோவின் கல்லறைக்கு அருகில் தனக்காக இடம் வாங்கினார்.
முதுமையை நினைத்தால் பயம் என்று கூறிவந்த மன்றோ, தனது 36வது வயதில் முதுமையைக் காணாமலேயே மறைந்தார். ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்த மன்றோவுடைய மரணத்தின் பக்கங்கள் மட்டும் இன்றளவும் மூடப்பட்ட பக்கங்களாகவே இருக்கின்றன.
இதையும் படிங்க: கொடி பறக்குற காலம்... உலக சாதனைப் படைத்த மாமன்னன்!