சென்னையில் பூக்கடை பகுதியில் கூலி வேலைக்காக தினமும் காத்திருந்த தொழிலாளிகளை, வீட்டை காலி செய்ய ஆட்கள் தேவை எனக் கூறி சிலர் அழைத்து சென்றுள்ளனர். பின் அவர்களை என்.எஸ்.சி போஸ் சாலையில் காலியாக உள்ள வீட்டின் முன் நிறுத்தி விட்டு, எடுத்து செல்லவேண்டிய பொருட்களை போட்டோ எடுத்து வருவதாக கூறி, அவர்களிடம் இருக்கும் செல்போன்களை ஏமாற்றி திருடிச் சென்றுள்ளனர்.
ஏமாற்றமடைந்த தொழிலாளிகள் இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதன் மூலம் விருத்தாசலத்தைச் சேர்ந்த சுரேஷ் (32), தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சித்திக்(53), நைனார் முஹம்மது (63) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இவர்களிடம் விசாரணை செய்ததில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூலி வேலை தேடி வருவோரை கண்காணித்து அவர்களை வீடு காலி செய்வதற்காகவும், கட்டுமான வேலை செய்வதற்காகவும், தோட்டங்களில் ஆட்கள் தேவை எனக் கூறியும் அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் செல்போன்கள் மற்றும் பிற பொருள்களை திருடிச்சென்றது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இவர்களிடம் இருந்து 11 செல்போன்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் வேறு யாரிடம் இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.