சென்னை: கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 27) என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரஸ்ட் சிகரத்தை நோக்கி தனது பயணத்தைத் துவங்கி, மே 19ஆம் தேதி எவரஸ்ட் சிகரத்தின் முழுமையான உயரமான 8 ஆயிரத்து 850 மீட்டரில் 6850 மீட்டர் உயரத்தை எட்டி சாதனை படைத்தார்.
பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராகன இவருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் வந்ததன் காரணமான கடந்த ஒரு வருட காலமாக இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். மேலும் 3 மாத உடற்பயிற்சி, கடும்பனி, குளிரைத் தாங்க மணாலி சோலங், நேபால் போன்ற பகுதிகளில் தங்கி தனது உடலையும், மனதையும் உறுதிபடுத்தி வந்துள்ளார்.
ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், கனவும் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக சாதனை புரியலாம் என்பதற்கு இவரே உதாரணமாக கருதப்படுகிறார். அது மட்டுமின்றி முதன் முதலில் எவரஸ்ட் உச்சிக்குச் சென்ற முதல் தமிழன் என்ற புகழையும் ராஜசேகர் பெற்று உள்ளார்.
ராஜசேகர் பச்சை முத்து நேற்று (மே.23) விமான மூலம் சென்னை திரும்பினார். அவருடைய ஊர்மக்கள் சென்னை விமான நிலையத்தில் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சென்னை விமான நிலைய காவல்துறை ஆய்வாளர் பாண்டியன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகர் பச்சை முத்து, "நான் எவரெஸ்ட் மலையை ஏறி சாதனை படைத்துள்ளேன். இதற்கு காரணமாக இருந்த குடும்பத்தார், நண்பர்கள், ஸ்பான்சர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று எவரெஸ்ட் மலையின் அடித்தளமான 5 ஆயிரத்து 338 மீட்டரை அடைந்தேன். மே 19ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்தேன்.
தற்போது, எவரஸ்ட் சிகரத்தின் முழுமையான உயரமான 8 ஆயிரத்து 850 மீட்டரில் 6,850 மீட்டர் உயரத்தை எட்டி சாதனை படைத்துள்ளேன். எவரெஸ்ட் மலையின் உச்சிக்கு செல்ல செல்ல அதிக அளவில் குளிர் இருந்தது. இரவு நேரங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உடன் உறங்கியது மிகவும் கடினமாக இருந்தது. எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு தகுந்த உடற் பயிற்சியும், திறனும் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தன்னுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் மலை ஏறினர். ஆனால் அவர்கள் பாதி வழியிலேயே நின்று விட்டனர். மலை ஏறும் பொழுது அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்வதால் எடை அதிகமாக இருக்கும். இதனால் நிறைய பேரால் அதிக தூரம் ஏற முடியாமல் நின்று விடுவார்கள். ஆனால் நான் அனைத்தையும் தாண்டி கடுமையாக முயற்சித்து எவரெஸ்ட் உச்சிக்கு சென்று சாதனை படைத்துள்ளேன்.
அதாவது 5,000, 6,500, 7,500, 1,500, 8,800 என படிப்படியாக ஏறினேன். இனி வருங்காலத்தில் இளைஞர்கள் விடாமுயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்து சாதனை படைக்க வேண்டும். முக்கியமாக மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் இல்லாமல் இருந்தாலே பல சாதனைகளை செய்ய முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழன்.. சென்னை இளைஞர் சாதனை..