சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் 2008ஆம் ஆண்டு முதல் தற்காலிக அரசு பணியாளராக உள்ளார். இவர் உட்பட 135 பேருக்கு பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறி போலி ஐஏஎஸ், அதிமுக பிரமுகர், வழக்கறிஞர் ஆகியோர் ரூ.4 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கார்த்திகேயன் அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2018ஆம் ஆண்டு சூசலம் மாவட்டம் மன்னராபாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராமசந்திரன் என்பவர் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கூறி கொண்ட சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் செல்வபாரதி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சசிகுமார், தனக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உதவியாளர் இளங்கோ நெருங்கிய தோழர் என்றும் நபர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்தால் பணி நிரந்தரம் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்த 135 பேரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் சுமார் 4 கோடி ரூபாயை வாங்கி கொடுத்தேன். அதன்பின் பணி நிரந்தரம் செய்து விட்டதாக கூறி பணி நியமன ஆணை ஒன்றை காண்பித்தார். அது போலி ஆணை என்று சந்தேகமடைந்தேன். இதனிடையே அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர். அவர்கள் குறித்து விசாரிக்கையில், அதிமுக பிரமுகர் ராமசந்திரன் கள்ள நோட்டு விவகாரத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்டதும், சசிகுமார் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பலரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்து கைது செய்யப்பட்டதும் தெரியவந்ததது. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய இருவர் மீண்டும் சிறையிலடைப்பு