சென்னை: இலங்கையை பூர்வீகமாக கொண்ட லைகா குழுமம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் செல்போன், சிம் கார்டு, சினிமா புரொடக்ஷன், டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஷ்கரன் 2006ஆம் ஆண்டு லைகா மொபைல்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தற்போது 16க்கும் மேற்பட்ட தொழில்களில் நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக லைகா நிறுவனம் கத்தி, எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன், தர்பார் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல பிரமாண்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. இந்தியன் 2, விடா முயற்சி போன்ற படங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் தொடர்பாக லைகா குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில், தமிழகம் முழுவதும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரமாண்ட வசூல் செய்துள்ளதால், நடிகர்களுக்கு வழங்கிய சம்பளத் தொகை எவ்வளவு, இதில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை மட்டுமே வைத்து அதிக பொருட்செலவில் தயாரிப்பில் ஈடுபட்டு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளதால் கடந்த ஆண்டுகளில் ஈட்டிய வருவாயின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும், இந்தியாவில் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சம்பாதித்த பணத்தை சட்டவிரோதப் பணபரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடுகளில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சென்னை எம்.ஆர்.சி நகர் சத்ய தேவ் அவென்யூவில் உள்ள லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ தமிழ்க்குமரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறையினரின் சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது லைகா நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.