சென்னை: சென்னையில் வாட்ஸ்ப் அப் குழு மூலமாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புல்லட் இருசக்கர வாகனத்தை ஒரு கும்பல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில், மூன்று கட்டமாக 29 புல்லட் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புல்லட் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சுல்தான் லியாகத் அலி, மணலியைச் சேர்ந்த பாஸ்கர், புதுப்பேட்டையைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 10 புல்லட்கள், 6 உயர் ரக இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்துளளனர். இவர்கள் மூவரிடம் நடத்திய விசாரணையில் இருசக்கரவாகனத்தின் எஞ்சின் உள்ளிட்ட உதிரி பாகங்களை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சோகன்குமார் என்பவரிடம் விற்றது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சோகன்குமாரை கைதுசெய்தபோதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. காவல்துறையினர் விசாரணையில், சோகன்குமார், ஏரோநாட்டிகல் படித்துவிட்டு, பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு ப்ராஜெக்ட் செய்து கொடுத்து பணம் சம்பாதித்து வந்ததும், திருடிய எஞ்சின்களை வைத்து இரும்புத்திரை படத்திற்காக பிரத்யேகமாக பைக் ஒன்றை தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், விசாகப்பட்டினம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களுக்கு புதுவிதமாக பைக்கை வடிவமைத்து கொடுத்தும் வந்ததும், திருடிய இருசக்கர வாகனத்தில் வேறொரு எஞ்சினைப் பொருத்தி ஹைதராபாத், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.
திருடிய இருசக்கர வாகனத்தை உடனடியாக உதிரி பாகங்களாக பிரித்தெடுக்கும் கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனிப்படை காவலர்கள் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதுபோல் 68 புல்லட் பைக்குகள் திருட்டு!