சென்னை: சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று (அக்.05) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சித்தார்த், இயக்குனர் அருண் குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து இயக்குனர் அருண்குமார் பேசும் போது, “இந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி. சிந்துபாத் படத்திற்குப் பிறகு எனது டீம் என்னை முழுதாக நம்பினார்கள். சித்தார்த் போன்ற மனிதரைப் பார்ப்பது அரிது. இப்படத்தை என்னைவிட தோளில் சுமந்து வருபவர். சித்தார்த்தின் நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் சசி, “கதாநாயகியை பற்றி தவறாக பேசும் போது ஹீரோ அடித்து விடுகிறார். இது சாதாரணமானது. ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆர்ட் இருக்கிறது.
இந்த படத்தில் இவருடைய டிரான்ஸ்பர்மேஷன் அவ்வளவு அழகாக இருந்தது. இது வேற லெவல் படம். குழந்தை வன்கொடுமை மட்டுமில்லை. நிறைய விஷயங்கள் இருக்கிறது. இது ரொம்ப எமோஷனலான படம். இது என்டர்டெய்னிங்கான படம்” என்றார்.
மேலும் “சித்தார்த் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்கிறார். என் படம் ஓடுவது போன்ற சந்தோஷம் தான் எனக்கு. தமிழ் சினிமாவில் நல்ல படம் பண்ணுவது ஈசி. ஆனால் நல்ல படத்தை வெற்றிகரமாக கொடுப்பது கஷ்டம். இந்த படத்தை வெற்றிகரமாக கொடுத்துள்ளார்கள்” என்று நன்றி தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த் பேசுகையில், “சித்தாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி. இது ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணம். ஒரு நல்ல படமாக எடுத்து, வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் தருணம். கதையின் கருவை கேட்டதும், இந்த படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது.
ஒரு நல்லது பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்று கற்று கொள்வதாக இருந்தது. படத்தில் ஒரு விஷயம் நடப்பது தான் படம் என்று இல்லாமல், இது பொறுப்பாக குழந்தையை வளர்க்கும் படம். குடும்பங்களுக்கான படம். வன்முறையை கையாளுபவருக்கு அந்த பவர் கொடுக்காதீர்கள். அந்த மாற்றம் உடனே வராது. ஒவ்வொரு உரையாடல்களிலும் ஒரு புரிதல் வரும். நமக்குள் மாற்றம் வர வேண்டுமானால் குழந்தைகளிடம் நாம் பேச வேண்டும்.
இந்த படம் எல்லாரிடமும் சேரும் வரைக்கும் யோசிக்க வேண்டும். இந்த படம் எவ்வளவு பேரிடம் சேருகிறதோ, அந்த அளவிற்கு யோசிக்க வேண்டும். சினிமா சொல்லி கொடுத்த குருக்களுக்கு இந்த படத்தைக் காட்ட வேண்டும் என்று நினைத்து காட்டியது ரொம்ப பெருமையான விஷயம்” என்றார்.
மேலும், இன்றைக்கு ரஜினிகாந்த் போன் செய்து படத்தைப் பாராட்டியதாகவும், வீட்டுக்கு போனதும் பார்க்க வேண்டும் என்று சொன்னதாகவும் பேசிய சித்தார்த், “இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு வியாபார ரீதியாக வெற்றி. இந்த படத்தை தியேட்டரில் தான் கொண்டு வர வேண்டும் என்று இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். இது அழுத்தமான களம்.
பழனியில் 96 இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. எப்படி இரண்டு குழந்தைகளால் இந்த அளவு நடிக்க முடிந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அஞ்சலி படத்தை எடுத்த மணிரத்னம், இந்த இரண்டு குழந்தைகள் நடிப்பை அவ்வளவு பாராட்டினார்.
இரண்டாம் வாரத்தில் எல்லா பெரிய தியேட்டர்களிலும் சித்தா படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு நன்றி. இன்னும் இருபது நாட்கள் படம் ஓட வேண்டும். இப்படம் ஓடிடி, டிவி என சென்றாலும் நான் படத்தை பற்றி பேசிக்கொண்டு தான் இருப்பேன்” என்றார்.
இதையும் படிங்க: இதுக்கு மேல லியோ தான் வந்து சொல்லணும்.. ரத்தம் தெறிக்கும் லியோ டிரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!