சென்னை: அரசாணை 149-ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2013 டெட் ஒருங்கிணைந்த கூட்டு நலச்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையின் அடக்குமுறையின் காரணமாக தங்களின் போராட்டத்தை ஒருநாள் போராட்டமாக முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
2013 டெட் ஒருங்கிணைந்த கூட்டு நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறும்போது, 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி (TNTET) பெற்று 10ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு இதுவரை, 40 ஆயிரம் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் நாங்கள் தேர்வெழுதி வெற்றிபெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு கடந்த கால அரசு அரசாணை 149-ஐ பிறப்பித்தது.
ஏற்கனவே, 'டெட் தேர்ச்சி பெற்றவர்கள் பணிநியமனம் பெற மீண்டும் ஒரு தேர்வு எழுத வேண்டும்' என ஒரு அர்த்தமற்ற அரசாணையை கொண்டு வந்தது. மேலும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதலமைச்சர் 'மு.க.ஸ்டாலின் அரசாணை 149-ஐ இருள் சூழ்ந்த அரசாணை' என்று வன்மையாக கண்டித்து, மேலும் 'திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த அரசாணை நீக்கப்படும்' என்றும் '2013 டெட் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும்' என்றும் திமுக தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெறச் செய்தார்.
இதையும் படிங்க: அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. பணம் பார்க்கவா போட்டித் தேர்வு? - அரசை விளாசிய டெட் ஆசிரியர்கள்!
திமுக ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், எங்களுக்கு மட்டும் இன்னும் விடியல் எட்டப்படவில்லை. எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடப்பு ஆட்சி காலத்தில் 21 போராட்டங்களை முன்னெடுத்தோம். அதிலும் குறிப்பாக, கடந்த மாத இறுதியில் நாங்கள் சென்னை டிபிஐ-ல் எடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் போது, அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லபட்டது.
இச்சூழலில் திடீரென அந்த வார்த்தையையும் தேர்தல் வாக்குறுதி - 177 -யும் காற்றில் பறக்கவிட்டு 4 தினங்களுக்கு முன்பு ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு வேதனையை மேலும் அதிகபடுத்தி உள்ளது. எனவே, உடனடியாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமனத் தேர்வை புறக்கணிக்கின்றோம் என இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட கடிதங்களை பள்ளிக்கல்விதுறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம்.
இருள் சூழ்ந்த அரசாணை என்று தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் அமைச்சரும் செயல்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டி செயல்படுவதன் உள்நோக்கம் இன்றுவரை விளங்காத ஒன்றாகவே உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடபட்ட (அரசாணை 149-ஐ) நியமனத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட பெருந்துறையில் கண்டன தொடர் போராட்டத்தை முன்னெடுத்தோம். எங்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாம் முன்னெடுத்த நிகழ்வானது, காவல்துறை அடக்குமுறையாலும் கைது நடவடிக்கையாலும் இன்று ஒருநாள் நிகழ்வோடு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நமக்கான ஆதரவு பெருகி வருவதாலும் நமக்கான தீர்வை அரசு உடனடியாக அறிவிக்கும் வரை, நமது போராட்டம் தொடரும். இனிவரும் நாட்களில் எங்கு என்ன மாதிரியான நிகழ்வை முன்னெடுக்கலாம்? என ஒருங்கிணைந்த 2013 டெட் நலச்சங்கத்தின் நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நிலைப்பாட்டை அறிவிக்கின்றோம்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை!