சென்னை: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி "எண்ணும் எழுத்தும்" திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் மயில் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை.
எனவே, தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாக கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 க்குப் பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைவதுடன், மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும், சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்வதோடு, பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் 29ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கிப் பேரணியில் பத்தாயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.