இந்திய ராணுவத்தில் புதிதாக சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் மாதிரி வெடிகுண்டுகள் வைத்து பயிற்சி அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ராணுவத்தில் புதிதாக சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு அந்தமானில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்காக நாக்பூரிலிருந்து சென்னை ராணுவத்தினர் மாதிரி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் வாங்கி உள்ளனர்.
இதன் பின்னர் மாதிரி வெடிகுண்டு பொருட்கள் அனைத்தையும் பெட்டிகளில் ஏற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அந்தமான் பகுதிக்கு கொண்டு செல்லும்போது ஒரு பெட்டியை ராணுவ வீரர்கள் மறந்து ரயில் நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளனர். இந்த பெட்டி ரயில்வே பார்சல் அலுவலகத்தில் பல மாதங்களாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், யாரும் பெட்டியை பெற வராததால் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டு திறந்து பார்க்கும்போது 10 கண்ணி வெடிகள் இருப்பதைக் கண்டு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பார்த்த போது அவை மாதிரி ராணுவத்தினர் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் கண்ணி வெடிகள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் ராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அதிமுக, பாமக மிகப்பெரிய தேசத்துரோகம் செய்துவிட்டது ' - திருமாவளவன் குற்றச்சாட்டு