சென்னை: மிக்ஜாம் புயலினால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் கடும் சேதத்தைச் சந்தித்தது. பல்வேறு கட்டங்களாக வெள்ள மீட்புப்பணி மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், இதனை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு சென்னை வந்தது. இக்குழு நேற்று முதல் பகுதி வாரியாக வெள்ள பாதிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதைத்தொடர்ந்து இன்று (டிச.13) இரண்டாவது நாளாக வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரி திமான் சிங் மற்றும் ரங்நாத் ஆடம் உள்ளிட்ட மூவர் நன்மங்கலம், பெரியார் நகர் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வரைபடத்தை பார்த்து அதிகாரிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பாதிப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை காட்சிப்படுத்தி அதிகாரிகள் விளக்கினர். இந்த ஆய்வில் ககன்தீப் சிங் பேடி, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமத்துவ பெரியார் நகரில் 12 அடி வரை மழைநீர் தேங்கியிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் அத்தியாவசியத்திற்குக் கூட கடும் அவதிக்குள்ளாகினர். அந்தப் பகுதியில் ஆய்வு செய்த மத்திய குழு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் நிலைகுறித்து கேட்டறிந்தனர்.
மேலும், பாதிப்பின் போது உரிய பாதுகாப்பு மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குணால் சத்யார்த்தி, “அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தும், இயற்கை பேரிடர் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் அரசு பால் உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கி, நிவாரண பணிகளை மேற்கொண்டு இருக்கிறது.
இது குறித்தான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க சென்னைக்கு விரிவான திட்டம் தேவைப்படுகிறது. தற்காலிக மீட்பு மற்றும் உதவிகள் இப்போது செய்யப்பட்டுள்ளன. இதற்கான எதிர்கால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். நீண்டகால திட்டப் பணிகள் இருந்தாலே இதுபோல பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருக்கும். வானிலையை கட்டுப்படுத்த முடியாது. அதே நேரத்தில் அதனால் ஏற்படும் சேதத்தை திட்டமிடல் மூலம் குறைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்