சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து. இதற்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் 28 ஆயிரத்து 588 தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரையில் நீடிப்பு செய்து அறிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தங்களை டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர். விண்ணப்பத்தை திருத்தம் செய்தவர்கள் மீண்டும் கடைசி பக்கத்தில் உள்ள சமர்ப்பி பட்டனை அழுத்தி மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் செல்போன் எண், இமெயில் ஐடி ஆகியவற்றில் மாற்றம் செய்ய இயலாது. இனிமேல் வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எந்தவிதமான கோரிக்கையும் ஏற்க இயலாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 பட்டதாரி பணிக்கு 2012ஆம் ஆண்டில் தகுதி பெற்றிருந்தால், 2023ஆம் ஆண்டு வரையில் 11 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5.5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் 2 பட்டதாரி பணிக்கு 2013ஆம் ஆண்டில் தகுதி பெற்றிருந்தால், 2023ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் என்பதால், அவர்களுக்கு 5 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும். 2014ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4.5 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2017ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2019ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 2022ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 0.5 மதிப்பெண்களும், 2023ல் தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்கப்படும்.
மேலும், பகுதி 1ல் தமிழ் பாடத்தில் 30 கேள்விகளுடன் 30 நிமிட தேர்வாக இருக்கும். இந்த தேர்வில், 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுபவர்களின், முதன்மை தேர்வு விடைத்தாள் மட்டுமே திருத்துவதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பகுதி 2 மூன்று மணிநேர தேர்வாக நடைபெறும். இதில் 150 கேள்விகள் இடம்பெறும். பொதுப் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், இதர பிரிவினருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக இருக்கும்.
ஆசிரியர் பணி போட்டித் தேர்வு எழுதுவதற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்கள், www.trb.tn.gov.in அல்லது www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் கேட்கும் சான்றிதழ்களைத் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமன போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் செல்போனில் மற்றும் இமெயில் ஐடி சரியாக இருக்க வேண்டும். அதன் மூலமே தகவல்கள் அனுப்பப்படும்.
தமிழ் வழியில் கற்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ள நிலையில், அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மற்றும் அதற்கு இணையான படிப்புகள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தேவையான சான்றிதழ்கள், இறுதியாகப் படித்த கல்வி நிறுவனத்தின் தடையில்லா சான்று, அரசு அதிகாரியின் கையெழுத்துடன் நகல்கள் இடம்பெறவேண்டும். மேலும், தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு, 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை (Toll Free) காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். trbgrievances@tn.gov.in என்ற முகவரியிலும் குறைகளைத் தெரிவித்துத் தீர்வு காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.