சென்னை: இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட 2009இன் கீழ் ஆசிரியர்கள் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணிக்குத் தகுதிப் பெற்றவர்கள் என தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 2010ஆம் ஆண்டு அறிவித்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 2013, 2017, 2019ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற நிலையில், தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்கள் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 50ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்சிக்கான காலக்கெடுவை ஏழு ஆண்டில் இருந்து வாழ்நாள் முழுமைக்கானதாக மாற்ற தேசிய ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது.
இந்த நடைமுறை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்து காத்திருக்கும் சுமார் 85 ஆயிரம் பேர் பயனடைவார்கள்.
ஆசிரியர் தகுதித் தோ்வில் தேர்ச்சி பெற்றாலும் தற்போதைய விதிகளின்படி ஆசிரியர் பணிக்கு தேர்வாக மீண்டும் ஒரு போட்டித் தேர்வினை எழுத வேண்டும்.