தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தமிழகதலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில்,நடைப்பெறவுள்ள 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மார்ச் 24 ஆம் தேதியன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 25-ந் தேதியன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் பொதுத் தேர்வு நடைப்பெறவுள்ளது.இதற்காக மாணவர்களுக்கு தேர்வு முந்தைய நாளான மார்ச் 24 ஆம் தேதி பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இதனால் பயிற்சி வகுப்பை மார்ச் 30 அல்லது 31 ஆகிய தேதிகளில் நடத்தினால் மாணவர்களுக்கு 24-ந் தேதியன்று பயிற்சியளிக்க வாய்ப்பாக அமையும். மேலும் கடந்த தேர்தலை போன்று கர்ப்பிணி பெண்களுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு, வயதான உடல் நலிவுற்ற ஆண், பெண்களுக்கு தேர்தல் பணியிலிருந்து முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேபோல் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மெண்ட்டும், மாணவர்களுக்கு கணித தேர்வு நடைபெற இருப்பதால் தேர்தல் பயிற்சி வகுப்பை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார்.