இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் 'வாத்தி'. முதல்முறையாக தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் 'வாத்தி' திரைப்படத்தை தயாரித்துள்ளது. கல்வி வணிகமயமாவது குறித்து இப்படம் பேசுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரிலும் வரும் 17ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்புக்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வாத்தி என்ற பெயர் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு, ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், “சமூகத்தில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு பாடத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தந்து, சிறந்த மனிதனாக மாற்றும் சமூக செயல்பாட்டில் உள்ள ஆசிரியர்களை கொச்சையான வார்த்தையில் ‘வாத்தி’ என்று அழைப்பது ஆசிரியர்களை மனவேதனைக்கு உள்ளாக்குகிறது” என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், படத்தின் பெயரை நல்ல தமிழில் ‘வாத்தியார்’ என்றோ அல்லது தெலுங்கில் உள்ளது போல ‘சார்’ என்றோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்த அஜித்தின் "துணிவு"