சென்னை: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் உலகிலேயே முதன்முறையாக உண்மையான சிலைகளைக் கொண்டு விர்ச்சுவல் மியூசியத்தை உருவாக்கியது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.
இந்த நிலையில், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி புதிய முயற்சியாக, சிறப்பாக வேலை செய்த காவல் அதிகாரிகளுக்கு டிஜிட்டல் முறையில் அங்கீகாரத்தையும் பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி திருவான்மியூரில் ரத்னேஷ் பாந்தியா என்பவரின் வீட்டில் 15 சிலைகளை மீட்ட டிஎஸ்பி முத்துராஜ், டிஎஸ்பி மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் ரீகன் லட்சுமி காந்த் ஆகியோருக்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்காக, NFT (non fungible token ) எனப்படும் டிஜிட்டல் வெகுமதியை வழங்கியுள்ளார்.

உலகிலேயே இரண்டாவதாக இந்த முறையில் பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் துபாய் நாட்டில் முதன்முறையாக காவலர்களுக்கு இது போன்று வெகுமதி வழங்கப்பட்டது. அதேபோல் உலகிலேயே முதல் முறையாக, சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு SBT ( soul bound token) டிஜிட்டல் மெடல் வழங்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் இதுபோன்று சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பதக்கங்களும், பணமும் பரிசாக கொடுத்து பாராட்டுவார்கள். தற்போது டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப புதிய முறையில் தமிழக காவல்துறை அங்கீகாரத்தையும் வெகுமதியையும் வழங்கியுள்ளது.

NFT எனப்படும் டிஜிட்டல் வெகுமதியை பயன்படுத்தி, இசை, ஓவியம் உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்களை உருவாக்கலாம் என்றும் அவற்றை சில குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் ஏலத்தில் விற்பனை செய்து கிரிப்டோ கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மதிப்பு கிரிப்டோ கரன்சியை போல் நாளுக்கு நாள் உயரும் தன்மை கொண்டது. பிளாக் செயின் டெக்னாலஜி என்ற ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் இந்த டிஜிட்டல் சொத்துக்களை நாம் பாதுகாத்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBT எனப்படும் டிஜிட்டல் அங்கீகாரம், கிரிப்டோ கரன்சி மற்றும் பணமாக மாற்ற முடியாது. ஆனால் இந்த டோக்கன், சர்வதேச அளவில் விருதுகள், சான்றிதழ்கள் போன்ற ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:G Pay மூலம் சிறுக சிறுக ரூ.3 லட்சம் திருட்டு.. சிறுவன் அகப்பட்டது எப்படி?