சென்னை: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சரத் கமலுக்கு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து அவர் பயின்ற பள்ளியின் சார்பில் தாமரை மலர்மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் கமல், “அரையிறுதிக்கு பிறகு அதிக நம்பிக்கையோடு விளையாடினேன். கடினமாக ஆரம்பித்த போட்டி, பின் சிறப்பாக அமைந்தது. 2006 ஆம் ஆண்டு இரண்டு தங்கம் வென்றிருந்தேன். இந்த முறை மூன்று தங்கம் வென்றுள்ளேன்.
இந்த போட்டி, வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்தது. விளையாட்டிற்கு தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி முக்கியத்துவம் வழங்க வேண்டும். மைதானங்கள் அதிகமாக உருவாக்கி தர வேண்டும். வீரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது.
படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களுக்கு கவனம் செலுத்த முடிவதில்லை. சிறுவயதில் என்னோடு இருந்தவர்கள் என்னை விட சிறப்பாக விளையாட கூடியவர்கள். ஆனால் அவர்கள் படிக்கச் சென்றதால் விளையாட்டை தொடர முடியவில்லை.
இளம் வயதை விட வயதாக வயதாக சிறப்பாக விளையாடுகிறேன். வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை வென்று தருவேன்” என கூறினார்.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: நான் விளையாடியதில் சிறந்த போட்டி அந்த போட்டிதான் - சரத் கமல்