சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டியவை குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் தாரேஸ் அஹமது மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், “ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 - 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் இலக்கு நிர்ணையம் செய்யப்பட்டது. அதில் அனுமதி ஆணை வழங்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, ஆவாஸ் பிளஸ் கணக்கெடுப்பின்படி பயனாளி வாரியாக சரிபார்த்து, மீதம் வழங்கப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலில்,
இணையதளத்தில் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களான வேலை அடையாள அட்டை எண் மற்றும் இனம் மாற்றம் குறித்து தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள தளர்வுகளை பயன்படுத்தி, வீடு கட்டுவதற்கு உரிய ஆணைகள் இன வாரியாகவும், அனுமதிக்கப்பட்ட பட்டியல்படி முழுமையாகவும் வழங்கபட்டுள்ளதை உறுதி செய்து, கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
பயனாளிகள் பட்டியல், ஊராட்சி மன்ற அலுவலக வெளிப்புறச் சுவரில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட வேண்டும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அனுமதி ஆணை வழங்கப்படாது. நிலுவையில் உள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு , நிரந்தர காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள குடும்பங்களுக்கு 31.1.2023க்குள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் 1.2.2023 அன்று வழங்கப்படாது நிலுவையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை, மத்திய அரசால் திரும்ப பெறப்படும். இதனை கிராம சபையில் விவாதித்தல், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, நிரந்தர காத்திருப்பு பட்டியல் மற்றும் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட மாநில அளவிலும்,
வட்டார அளவிலும், கிராம ஊராட்சி அனாவிலும் அமைக்கப்பட்ட பணிக்குழுக்கள் மூலம் நிலமற்ற பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழக்கும் வகையில், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள ஆட்சேபனை அற்ற அரசு, புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும்.
கிராம ஊராட்சிக்கு சொந்தமான பொது நிலங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆதி திராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அவற்றின் தளவமைப்புகள், நிலமற்ற பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் 12.12.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இத்துறையின் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, ஆகாஸ் பிளஸ் வீடு வழங்கும் திட்டம் (மறு கணக்கெடுப்பு), புதிய குடிசை கணக்கெடுப்பு ஆகியகணக்கெடுப்பு பட்டியல்களையும் செம்மைப்படுத்தும் பட்டியல்களில் இடம் பெறாத குடிசைகள், நிலைத்த தன்மையற்ற, வாழத் தகுதியற்ற வீடுகளில் வாழும் குடும்பங்களை கணக்கெடுக்கவே அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஊராட்சி ஒன்றியங்களில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அந்த பயனாளியின் பட்டியல் கிராம ஊராட்சியில் வைத்து தீர்மானம் நிறைவேற்றி வழங்க வேண்டும். ஆனால் வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டாலும், சிலர் பயனாளிக்கு அந்த உத்தரவை அளிக்காமல் இருக்கின்றனர்.
இதனால் பயனாளி, தங்களுக்கு வீடு வந்த தகவல் தெரியாமல் உள்ளனர். எனவே வீடு பெற்றவர்களின் பட்டியலை கிராம ஊராட்சியில் ஒட்ட வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் ஊராட்சிச் செயலாளர்கள் வீட்டிற்கான பதிவினை தவறுதலாக பதிவு செய்ததும், இது போன்ற பிரசனைகளுக்கு காரணம்” என தெரிவித்தார்.
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் என்றால் என்ன?
இது ஊரகப்பகுதியில், 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடற்ற, குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டது. ஒரு வீட்டிற்கான மெத்த மதீப்பீட்டுத்தொகை ரூ.170,000இல், திட்ட நிதி ரூ.1,20,000, கூடுதல் கான்கிரீட் கூரைக்கான தொகை ரூ.50,000, மத்திய அரசு 60 விழுக்காடு – ரூ.72,000 , மாநில அரசு 40 விழுக்காடு – ரூ.48,000 என கூடுதல் ரூ.1,20,000 தொகை முழுவதும் இணையதளத்தின் வழியாக (PFMS) பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
கான்கிரீட் கூரைக்கான தொகை ரூ.50,000 என்பது மாநில அரசால் முழுவதுமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அனைத்தும் தொடர்புடைய வட்டாரங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையில் சிமெண்ட், கம்பி, கதவு, ஐன்னல் மற்றும் லோகோ டைல்ஸ் ஆகியவற்றிற்கான தொகை முழுவதும் வட்டாரங்களில் பிடித்தம் செய்யப்பட்டு, மீதம் உள்ள தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது.
பயனாளிகள், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின்படி (SECC) தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுகின்றனர். இனவாரி ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் மீதமுள்ள 40 விழுக்காடு மற்றும் இதர வகுப்பினருக்கும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள், பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், குறைந்தபட்சம் 25 சதுர மீட்டா் பரப்பில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், வீட்டின் கட்டுமானப் பணிக்காக 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியமும், தூய்மை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கழிப்பறைக்கான மதிப்பீட்டு தொகை ரூ.1,20,000 வழங்கப்படும்.
இதையும் படிங்க: குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த செக்!