கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மதராஸ் மாகாணம் மொழிவாரி மாநிலங்களாக 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரிக்கப்பட்டது. இதில் தங்களுக்கு என்று தனி மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ஆம் தேதியை கேரள மக்கள் 'கேரள பிறவி தினம்' என்றும் கர்நாடக மக்கள் 'கன்னட ராஜயோத் சவா ' என்றும் கொண்டாடிவருகின்றனர்.
இதில் 'மதராஸ் மாகாணம்' என்று அழைக்கப்பட்ட பகுதியை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய 1967 முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி, மொழிவழி மாநிலமாக ஆந்திரா, கேரளா பிரிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயாக நிலமாக மாறிய நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு நாள் அன்று முதலமைச்சர் தலைமையில் மொழிக் காவலர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்படும் எனத் தெரிவித்த கே. பாண்டியராஜன், கருத்தரங்குகள் கவியரங்குகள் நடத்தப்படும் என்றார். மேலும் இதற்கு 10 லட்ச ரூபாய் செலவிடப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் நடக்கவுள்ளது. காலை முதலே தமிழ் மொழி சார்ந்த கண்காட்சிகள், கருத்தரங்கம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. மாலை நடக்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே. பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில், கண்காட்சிக்காக கீழடியில் கிடைத்த பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் இன்று காலை காணொலி கலந்தாய்வு மூலம் திறந்துவைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: நவம்பர் 1 தமிழ் வளர்ச்சி நாள் - கம்யூனிஸ்ட் கட்சி!