சென்னை: தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தவறான தகவல் அளித்து கல்வி கட்டணச் சலுகை பெற்ற மாணவ, மாணவியர் மீதும் மற்றும் அதேபோன்று முதல் தலைமுறை பட்டதாரி பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தலைமுறைப் பட்டதாரி சான்று பெற்று, அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மொத்த முழு ஊதியத்தையும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் திரும்ப வசூலிக்கலாம் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள அரசாணையில், ''மனிதவள மேலாண்மைத்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர், வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப்பணியிடங்களில் கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்த நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை சான்றிதழ் வழங்குவதற்கு புதிய இணையத் தொகுப்பு உருவாக்க வேண்டும்.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முதல்தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளில், ஒரு குடும்பத்தில் கல்விக் கட்டண சலுகையினை பயன்படுத்தி முதலில் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்தாலும், வேலைக்குச் செல்வதற்கான சான்றிதழ் வழங்கும் போது அந்தக் குடும்பத்தில் இளையவர் முதலில் பட்டப்படிப்பினை முடித்திருந்தால் அவருக்கு தான் முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும்.
முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு 10,12ம் வகுப்பு முறையில் படித்து இருக்க வேண்டும். மேலும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. ஆண்டு வருமானம் கிடையாது. எந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால் இந்தச் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதி உடையவர். இரட்டை குழந்தையராக பிறந்து வளர்ந்த பிறகு, முதல்தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் இரண்டு பேருக்கும் வழங்கலாம்.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தைச் சார்ந்த முதல் பட்டதாரி மாணவர்கள், வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை பெறுவோர் விண்ணப்பிக்கலாம்.
குற்றவியல் நடவடிக்கை: மனுதாரர் தவறான தகவல் அளிக்கும் பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்:-
தவறான தகவல் அளித்து கல்வி கட்டணச் சலுகை பெற்ற மாணவ, மாணவியர் மீதும் மற்றும் அதேபோன்று முதல் தலைமுறை பட்டதாரி பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மூன்று மடங்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தோ அல்லது அவரது பெற்றோரிடமிருந்தோ வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கலாம் மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரி சான்று பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மொத்த முழு ஊதியத்தையும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் திரும்ப வசூலிக்கலாம்.
தவறான உறுதிமொழி அல்லது தவறான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் பெறப்பட்டதாக பின்னர் தெரிய வந்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் வட்டாட்சியரால் ரத்து செய்யப்படும்'' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட தக்காளி விலை: கிலோ ரூ.110-க்கு விற்பனை... காரணம் என்ன?