சென்னை: தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை(ஏப்.5) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:-
- கடலில் மீன் பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் உள்ள பத்தாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் 40 ஆயிரம் உயிர் காப்பு சட்டைகள், நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், மேற்கு வாடி மற்றும் ரோஸ்மா நகர் ஆகிய மீன் இறங்குதளங்கள் 45 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தப்படும்.
- திருவள்ளூர் மாவட்டம் நொச்சிக்குப்பம், திருவாரூர் மாவட்டம் முணங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய மூன்று மீனவ கிராமங்களில் 23 கோடி செலவில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டம், அன்னை நகர் மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்துதல் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தூர்வாருதல் ஆகிய பணிகள் மொத்தம் 25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- திண்டுக்கல் மாவட்டம் மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமை மூலம் 80 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
- சென்னை மாதவரம் பகுதியில் உள்ள மணலி மற்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து பொழுதுபோக்கு மீன் பிடிப்புடன் கூடிய சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
- சென்னையில் வண்ண மீன்கள் கண்காட்சி மற்றும் மீன் உணவு திருவிழா 50 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.
- மீனவர்களின் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!