சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது.
இந்நிலையில், அவரது உடலுக்கு பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், விமானம் மூலம் சென்னை வந்து அவரது உடலுக்கு அஞ்சலில் செலுத்தினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் இறந்தார் என்ற செய்தி எனக்கு பேரிடியான செய்தியாகத்தான் உள்ளது. சொந்த சகோதரனை இழந்ததுபோல, மனதில் எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மிகவும் நல்ல உள்ளம் படைத்த மனிதர். மேலும் அரசியலில் மிக துணிச்சல்மிக்க தலைவராக இருந்தவர்.
அரசியலில் இருக்கும் போதும், திரைத்துறையில் இருக்கும்போதும் அரசியல் முடிவுகளுக்காக பல முறை நான் அவரை தேமுதிக அலுவலகத்திற்கு வந்து சந்தித்துள்ளேன். இப்படி ஒரு நிலைமையில், நான் இங்கு வருவேன் என்று என் வாழ்நாளில் நினைக்கவில்லை. விஜயகாந்த், பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகுந்த மரியாதை உடன் இருந்தவர்.
விஜயகாந்த் மறைந்த தகவலை அறிந்த பிறகு உடனடியாக மோடி இரங்கல் தெரிவித்தார். நல்ல நண்பர், நல்ல மனிதர், நல்ல திரைப்படக் கலைஞர், நல்ல அரசியல்வாதி. ஒட்டுமொத்தத்தில் நல்ல மனிதரை நாம் இழந்திருக்கிறோம்” என கூறினார்.
இதையும் படிங்க: ரைஸ்மில் முதல் கோட்டை வரை..! விஜயராஜ் கேப்டன் ஆன கதை..!
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “உடல் நலம் மட்டும் அவருக்கு ஒத்துழைத்து இருந்தால் அரசியலில் இன்னும் பல உயரங்களுக்குச் சென்று இருப்பார். நான் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து வந்துள்ளேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மனநிலை எனக்கு தற்போது இல்லை. எல்லோரும் எந்தத் துறையில் இருந்தாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
விஜயகாந்த் வாழ்க்கையில் எதிர்மறையானவர் என்று சொல்லவே முடியாது. எல்லா நேர்மறையான அரசியல்வாதியின் முகம் அவர். திரைப்படக் கலைஞராக ஒரு முகம், நண்பராக ஒரு முகம், சகோதராக ஒரு முகம் என தனித்தனி முகம் இன்றி ஒரே முகமாக, வெளிப்படையான முகமாக இருந்தார்.
விஜயகாந்த் அவர்கள் எந்த உயரத்துக்கு வர வேண்டும் என நினைத்தாரோ, அதைவிட உயரத்திற்குச் சென்று இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆதங்கம்”, என கூறினார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நாயகன் விஜயகாந்த் செய்த சாதனைகள்..!