சென்னை: தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழு சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் பொதுச் செயலாளர் காமராஜ், “30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ஆம் தேதி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இயக்கத்தின் பிரதான கோரிக்கையாக இருக்க கூடிய இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை பெற்றே தீருவது என்ற முனைப்போடு செயல்படுகிறோம்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பாதிப்பினை களைவது, எமிஸ் திட்டத்தின் பாதிப்புகளை நீக்குவது, புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை வழங்குவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் 1.6.1988 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2 ஊதிய குழுவிலும் பேசித்தான் வாங்கித் தந்தனர். இதற்கு முன்னர் அனைத்து மட்டதிலும் பேசி வாங்கி தந்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தப் போது பேசி தனி ஊதியமாக 750 வாங்கித் தந்தார்.
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று வரையில் கிடைக்கவில்லை. மத்திய அரசு அடிப்படை ஊதியமாக 13,500 தருகிறது. தமிழ்நாடு அரசு 8000 தருகிறது. ஆசிரியர்களுக்கு கிட்டத்தட்ட 5500 ரூபாய் குறைவாக இருக்கிறது. ஆசிரியர்களுக்கு 2006ஆம் ஆண்டு ஊதியக்குழுவில் இருந்து குறைவாக ஊதியம் கிடைக்கிறது. இதனை களைய வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்தினோம்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பீடு செய்யும் விதமே சரியாக இல்லை. எல்லோருக்கும் எழுத்துத் தேர்வு வைப்பார்கள். ஆனால் அதில் எழுத்துத் தேர்வு இல்லாமல் வாய் வழியாக கேட்டு, மாணவர் பதில் கூறுவதை வைத்து தான் மதிப்பெண் போட வேண்டி உள்ளது. தற்பொழுது உள்ள ஆன்லைன் பிரச்சனையில் சரியாக வைக்க முடியாத நிலைமை உள்ளது.
ஆசிரியர்களுக்குத் தான் 24 மணி நேரமும் வேலையாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே பழைய முறையில் பாடம் நடத்த விடுங்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துவார்கள். ஆனால் புதுமையான திட்டம் கொண்டு வந்தோம் என கூறி ஆசிரியர்களை கல்விப்பணியே செய்யாத நிலையை அரசு ஏற்படுத்தி வருகிறது.
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை அரசு கைது செய்வது வழக்கம் தான். நாங்கள் போராட்டம் செய்தப் போதும் அரசு கைதுச் செய்துள்ளது. அதேபோல் தான் இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களும் இருந்தனர். ஆனால் ஊதியத்தை கொடுப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், 30 மாதமாக கொடுக்காமல் இருக்கின்றனர்.
திமுக தேர்தல் பரப்புரையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சொன்னது எதையும் நிறைவேற்றவில்லை. சரண்டர் கொடுக்கவில்லை, புதிய ஒய்வூதிய திட்டம் ரத்து செய்யவில்லை. எமிஸ் திட்டத்தில் மாற்றம் செய்வோம் என ஆசிரியர் தின விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதும் இன்று வரையில் வரவில்லை” எனத் தெரிவித்தார்.