சென்னை கலைவாணர் அரங்கில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், ‘தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2022’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதன்மை செயலாளர் சந்திர மோகன் மற்றும் இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுற்றுலாவை நெறிப்படுத்தி செயல்பாட்டை நிலைப்படுத்தவும், தரத்தை உயர்த்தவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சுற்றுலா தொழில் முனைவோருக்கான பதிவுகள் மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இதில் சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், தங்குமிடம், உணவகம் என 17 பிரிவுகளின் கீழ் 52 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், “தமிழ்நாடு சுற்றுலாத்துறை வரலாற்றில் சுற்றுலா விருதுகள் வழங்குவது இதுதான் முதல்முறை.
சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என சிந்தித்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்தளம் மேம்பாட்டு திட்டம் முதல் முறையாக தொடங்கி, வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு வழிகாட்டி வருகிறோம்.
மலை சார்ந்த சாதனங்களை மேம்படுத்த கொடைக்கானல், ஜவ்வாது மலை, கொல்லி மலை, ஏலகிரி உள்ளிட்ட 10 இடங்களை தேர்வு செய்து அங்கு பொழுதுபோக்கு சாதனங்கள் கொண்டதாக மேம்படுத்த உள்ளோம். சென்னை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு தனியார் ஹோட்டல்களுக்கு இணையாக மாற்றப்படும்.
பூம்புகார், ஆலத்தி காடுகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க உள்ளோம். திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளி காட்சிகள் அமைக்க உள்ளோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு