சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் 182 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 5 ஆயிரம் கேமராக்கள் மூலம் நகரத்தை கண்காணிக்கும் வசதியை கடந்த வாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், புவியியல் தகவல் தொழில்நுட்ப வரைபடம் (geographical information system) என கூறப்படும் கிரைம் மேப்பிங் வசதியை நேற்று (ஜூன் 27) சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை மாநகர காவல் துறையினரின் கட்டுப்பாட்டு பகுதிகளில், கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் 12 காவல் மாவட்டங்கள் வாரியாக தொகுக்கப்பட்டு மேப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொலை குற்றங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு 95, 2018 - 111, 2019 - 109, 2020 - 94, 2021 - 104, 2022 - 101 மற்றும் நடப்பு ஆண்டில் 26 என நடைபெற்றுள்ளதாகவும், அதுவும் ஞாயிற்றுக்கிழமை 123, திங்கள்கிழமை 114 ஆகிய கிழமைகளில் அதிகமாக நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சொத்து பறிப்பு குற்றங்கள் கடந்த 2017ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 697, 2021ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 982, 2022ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 197 மற்றும் நடப்பு ஆண்டில் இதுவரை ஆயிரத்து 707 வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாகவும், அதிகாலை மற்றும் இரவு 8 முதல் 10 மணியளவில் அதிகமாக நடந்துள்ளதாகவும், மேலும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் அதிக பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், மனித உடலை பாதிக்கும் குற்றங்கள் 2020ஆம் ஆண்டு ஆயிரத்து 784, 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 926, 2022ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 566, 2023ஆம் ஆண்டு ஆயிரத்து 6 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், திங்கள்கிழமை அன்று மாலை நேரங்களில் சம்பவம் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021ஆம் ஆண்டு 775, 2022ஆம் ஆண்டு 948 மற்றும் நடப்பு ஆண்டில் 288 சம்பவங்கள் நடைபெற்றதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. காவல் மாவட்டங்களில் அடையாறில் 708 சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகமாக நடைபெற்ற சாலை விபத்துகளை கணக்கெடுத்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேப் மூலமாக சென்னையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து வகையான குற்றச் சம்பவங்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் குற்றச் சம்பவங்கள் இந்த மேப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், அதிகம் குற்றம் பதிவான இடங்கள் மேப்பில் சிகப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டு கண்காணிக்கப்படும். இதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகமான கொலை சம்பவங்கள் வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளதாகவும், சொத்து தொடர்பான தகராறுகளில் அடையாறு காவல் மாவட்டத்தில் அதிகமாக நடைபெற்றுள்தை அதிகாரிகள் சுட்டிக் காண்பித்தனர்.
இது மட்டுமல்லாமல், இந்த மையத்தில் இருந்து ஜிபிஎஸ் கருவி பொருத்தி ரோந்து பணியில் ஈடுபடக் கூடிய 280 ரோந்து வாகனங்களையும் எளிதாக கண்காணிக்க முடியும். சுமார் 67 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் எங்கெங்கு பொருத்தப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களும் இந்த மேப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி விரைவாகச் சென்று குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என மாநகர காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பகலில் 40, இரவில் 50.. சென்னையில் புதிய ஸ்பீடு விதிகள் அமல்.. மீறினால் ஃபைன் எவ்வளவு தெரியுமா?