சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையினால் தினமும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுள்ளாகிவருகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருகின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த மே 10ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்தது. இருப்பினும், தொற்றுப் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை இன்று (மே 22) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயர் அரசு அலுவலர்கள் குழு, மருத்துவ வல்லுநர்கள் குழு, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு ஆகியவை வழங்கிய ஆலோசனைகளின்படி, தற்போதுள்ள ஊரடங்கிடனை மேலும் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளுமின்றி நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு வரும் திங்கட்கிழமை (மே 24) காலை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த முழு ஊரடங்கில் கீழ்கண்டவைகள் மட்டும் அனுமதிக்கப்படும்:
- மருத்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால், குடிநீர், பத்திரிக்கை விநியோகத்திற்கு அனுமதி.
- இன்றும் நாளையும் தனியார், அரசுப் பேருந்துகளில் வெளியூர் செல்ல அனுமதி.
- அனைத்து கடைகளும் இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படலாம்.
- மருத்துவ வசதிக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.
- உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
- காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும்.