சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று (ஜன.01) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (ஜன.02), தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். நாளை (ஜன.03) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
4-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் காக்காச்சி, ஊத்து, மாஞ்சோலை, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தலா 1.செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்: அரபிக்கடலில் நேற்று (ஜன.1) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜன-2), தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் வருகிற 6-ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: நாளை இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பு; தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் வடியாத வெள்ளநீர்!