சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் பேசுகையில், "வெற்றி நடைபோடும் தமிழகம் என்று கூறுகிறார்கள். நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம், அனைத்துச் சொத்துகளும் பறிமுதல் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த வழியில் வெற்றி நடைபோடுகிறது என்பதைக் காட்டுகிறது.
கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 70 ரூபாய் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை. மக்களின் ரத்தத்தை மத்திய, மாநில அரசுகள் உறிஞ்சுகிறார்கள். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தால் பெட்ரோல் விலை 50 ரூபாயாக இருந்திருக்கும்.
புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது எனப் பிரதமர் நரேந்திர மோடி பிரமாண பத்திரம் தாக்கல்செய்துள்ளார். தமிழ்நாட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அறிவித்துள்ளோம். அதனால் புதுச்சேரியிலும் உள்ஒதுக்கீடு செல்லும் என எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கேட்க வேண்டும்.
எடப்பாடி அரசின் 2020- 2021ஆம் ஆண்டுக்கான வருவாய்ப் பற்றாக்குறை மட்டும் 65 ஆயிரத்து 994 கோடி ரூபாய். இந்த வருவாய்ப் பற்றாக்குறையைப் போக்க மீண்டும் கடன் வாங்க வேண்டும். இந்த ஆண்டு முடியும்போது 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.
இந்த நேரத்தில் வேளாண் பயிர்க்கடன் ரத்து செய்கிறேன் என்கிறார் இபிஎஸ். அவரது இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நான்தான் இந்தியாவில் முதன் முதலாக 60 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பயிர்க்கடன் ரத்துசெய்தேன். அப்போது 60 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியில் செலுத்திய பிறகுதான் ரிசர்வ் வங்கி வேளாண் பயிர்க்கடனை ரத்துசெய்தது.
தற்போது 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் வேளாண் பயிர்க்கடன் ரத்து என்கிறார்கள். துணை முதலமைச்சரோ ஐந்தாயிரம் கோடி கொடுக்கிறார். மீதமுள்ள ஏழாயிரத்து 110 கோடி ரூபாய் யார் தருவது? தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளது என்ற தகவலை அறிந்தவுடன் சட்டப்பேரவை முடியும் நேரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரத்து என அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எவ்வளவு கடன், என்ன வட்டி என அவருக்கே தெரியாது. எப்படித் தெரியும் வெள்ளைத்தாளில் உள்ளதுதான் அவருக்குத் தெரியும். அடுத்தது ஆறு சவரன் வரை நகைக்கடன் ரத்து என உடனடியாக அறிவிக்கிறார். எந்த வங்கியில் உள்ள நகைக்கடன், கூட்டுறவு வங்கியிலா, கிராம வங்கியிலா அல்லது தனியார் வங்கியிலா?
சமீபத்திய நாளிதழ்களில் அறிவிக்காத ஒன்றை விளம்பரப்படுத்துகிறார்கள். அதில் கல்விக்கடன் ரத்து, நெசவாளர்கள் கடன் ரத்து முழுப்பக்கம் விளம்பரம் செய்கிறார்கள். இனிமேல் நீங்கள் மளிகைக் கடையில் கடன் வாங்கியிருந்தால் அதுவும் ரத்து.
நீங்கள் மற்றவரிடம் வாங்கிய கைமாத்துக் கடனும் ரத்து என அவர்கள் விளம்பரப்படுத்துவார்கள். எடப்பாடி பழனிசாமி நமது மனத்தில் இடம்பிடிக்க தமிழ்நாட்டின் நான்கு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்து என அறிவிக்கலாம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டில்லிபாபு, திமுக பகுதிச் செயலாளர் ஐ.சி.எஃப். முரளி, தேப ஜவஹர், கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர் நடராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.