சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் மனதின் குரல் (Mann ki Baath) என்ற வானொலி நிகழ்ச்சியில் நேரலையாக பேசி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி அவரது 100வது நிகழ்ச்சியாகும்.
மோடி புகழ்ந்த ஆளுமைகள்: பிரதமர் மோடி நாட்டு மக்களோடு உரையாடும் மனதின் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியின் 100வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதனை சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும் திரைப்பட நடிகைகள் அர்ச்சனா, லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்பட பாடகர் தீனா, கரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் ஹேமலதா: வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவதை கேட்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரோனா ஊரடங்கு காலத்தில் வீடியோவாக எடுத்து யூடியூப் மூலம் பாடங்களை எடுத்த விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அரசு உயர் நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் ஹேமலதா குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசினார்.
தமிழ்நாட்டினருக்கு விருது: மேலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு பேசிய நபர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கௌரவித்தார். மேலும், இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம் செய்யும் விவசாயிகள், விளைபொருட்களை ஆளுநருக்கு பரிசாக அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல், கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோரும் தங்களது அனுபவம் குறித்தும் பிரதமர் தங்களை குறித்து பேசியதால் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது பற்றியும் அவர்களின் மொழியிலேயே பேசியபோது, ஆளுநர் மட்டும் இல்லாமல் அனைவரும் சிரித்தனர். இவர்கள், உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மைமிக்க பாம்புகளைப் பிடித்தவர்கள் மற்றும் பாம்பு விஷ முறிவு மருந்துகளை கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள்.
அதேபோல் திரைப்படப் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, ஆளுநர் முன் பாடல் பாடி காண்பித்தார். மாற்றுத்திறனாளி லெப்டினன்ட் கர்னல் துவார்க் கிஸ் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நெல் ஜெயராமனுக்கு 'பத்மஸ்ரீ விருது' அளிக்க பரிந்துரை: பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றிய மறைந்த நெல் ஜெயராமனுக்கு 'பத்மஸ்ரீ விருது' (Padma Shri Award) வழங்க வேண்டும் எனவும், இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றும் ராஜூ வலியுறுத்தி பேசினார். இதனைத்தொடர்ந்து, பத்திரிக்கை தகவல் அலுவலகம் தயார் செய்திருந்த 100வது சிறப்பு டிஜிட்டல் இதழை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.
துளியும் அரசியல் இல்லை: பின்னர் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ''இங்கே கூடியிருக்கும் மதிப்பிற்குரிய அனைவருக்கும் வணக்கம். ராஜ்பவனுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்' என்று தமிழில் ஆளுநர் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'நீங்கள் எல்லோரும் மாற்றங்களை உருவாக்கக் கூடியிருக்கிறீர்கள். இன்று எது செய்தாலும் அரசியல் ஆகிவிடுகிறது. ஆனால், இன்று நாம் துளியும் அரசியல் பேசவில்லை. இவ்வாறு அறியப்படாத மக்களின் மக்கத்துவமான பல செயல்பாடுகள் குறித்து பிரதமர் பேசியுள்ளார். இங்கே பேசப்பட்டதெல்லாம் ஒரு சிறிய துளிதான் என்றும், இன்றும் அதிகமான முறை தமிழ்நாடு குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேலும், நாம் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கிறோம். விரைவில் சீனாவையே முந்திவிடுவோம்' என்றும் விவரித்தார். 'அரசுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. இருப்பினும், அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. இந்த நாடு மக்களின் மிகப்பெரிய பங்களிப்பால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது. ஒரு சிறிய பெண் குழந்தை 1 லட்சம் மரக்கன்றுகளை இந்த தாய் பூமிக்காக நட்டிருக்கின்றாள்' என்றும் தெரிவித்தார்.
சாதாரணமானவர்கள் மீது மோடி தனி கவனம்: இந்தியாவில் 23 கோடி மக்கள் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருவதாகவும்; அதேபோல், 100 கோடி மக்கள் ஒரே ஒரு முறையாவது மனதின் குரல் நிகழ்ச்சியை முழுவதுமாக கேட்டு இருப்பார்கள் என்றும் கூறினார்.
இந்த உலகில் அதிக மக்களால் கேட்கப்படும் ஒரே நிகழ்ச்சி மனதின் குரல் மட்டுமே என்று புகழ்ந்த அவர், சாதாரணமாக தோற்றமளித்துக் கொண்டு மிகப்பெரிய பணிகளை செய்து வருவோரை பாராட்டி கௌரவிப்பதற்காகவே நம் பிரதமர் தனி கவனத்தையும் அதற்கான நேரத்தையும் செலவிட்டு வருவதாக பிரதமர் மோடியைப் பாராட்டினார். குறிப்பாக, 100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அரசியல் பேசவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 100th Mann Ki Baat:3D ஒளியில் ஜொலித்த வேலூர் கோட்டை!