சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் பிற சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கி, கடந்த 2019ஆம் ஆண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை அப்போதைய அதிமுக அரசி நிறைவேற்ற வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சந்தித்து, திமுக ஆட்சி அமைந்த உடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.
ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்தும், மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால், மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமானது, மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் ரவிசங்கர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், G.O. 293 அமல்படுத்துதல், G.O. 225 திருத்தம் செய்தல், INSURANCE குறியீடுகள் அகற்றுதல், தாய் சேய் இறப்பு AUDIT G.O. 389 படி நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களைச் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதன்மைச் செயலர், மற்றும் துறை இயக்குநர்களுடன் சங்கத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் போது மா. சுப்பிரமணியன் கூறுகையில், G.O. 389 ன் படி MATERNAL DEATH AUDIT நடத்த ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், G.O. 225 AMENDMENT கோப்பு துரிதப்படுத்தப்பட்டு விரைவில் திருத்தப்பட்ட அரசாணை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும், INSURANCE குறியீடுகள் நிறைவேற்றக் கோரி மருத்துவர்கள் நிர்ப்பந்தப்படுத்தபட மாட்டார்கள் என்றும், தமிழக முதலமைச்சரால் 21 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட G.O 293-ஐ அமல்படுத்தத் தனி நபர் விருப்பத்தை அனைத்து அரசு மருத்துவர்களிடம் பெற்று விருப்பப்படும் மருத்துவர்களுக்கு அரசாணை 293 நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் இதுவரை அதற்கான எந்தவித ஆணையோ, நடவடிக்கைகளோ அரசு தரப்பில் எடுக்கப்படாததால் மார்ச் 12ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் போராட்டங்களை நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மார்ச் 23ஆம் தேதி அன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம். சென்னையில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.
அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மார்ச் 29ஆம் தேதி அன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் அனைத்திலும் ஒருநாள் - OP BOYCOTT - வெளி நோயாளிகள் பிரிவு சிகிச்சை புறக்கணிப்பு செய்யப்படும்.
இதன் பின்பும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு வழி இன்றி உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கப்பட்ட அரசாணை 293 யை 21 மாதங்களாகக் காலதாமதப்படுத்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உடனடியாக அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டி, ஏப்ரல் 5ஆம் தேதி அன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள், தலைமை மருத்துவமனைகள், பிற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவர்களும் ஒரு நாள் MASS CASUAL LEAVE போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஏதோ ஒரு சில மருத்துவர்கள் கூறுவதைக் கருத்தில் கொண்டு கடந்த 21 மாதங்களாக அரசாணையை நிறுத்தி வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்று கூறிய மாநில செயற்குழு நிர்வாகிகள், இவ்வாறு செய்வது வேண்டுமென்றே அங்கீகரிக்கப்படாத ஒரு சில நபர்களைத் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திற்கு எதிராக ஊக்குவிப்பதன் நோக்கில் செய்யப்படும் நடவடிக்கையோ என்று தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். எனவே அமைச்சர் மா. சுப்பிரமணியன் உண்மையைப் புரிந்து கொண்டு விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்க ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி