சென்னை: தமிழ்நாடு மீனவர்களின் வாரிசுகளுக்குக் கடலோர காவல்படை, மாலுமி போன்ற பணிகளில் சேருவதற்கான 2 ஆம் கட்ட சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, "மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் கடலோர காவல்படை, மாலுமி போன்ற பணிகளில் சேர்வதற்கான முதற்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 100 இளைஞர்களைக் கடற்படையில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு பயிற்சி வழங்கப்படுகிறது.
நெல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் விசாரணைக்கு வந்த கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக வெளியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரவு ரோந்து பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு டார்கெட் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும், போக்குவரத்து விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே காவல்துறையின் இலக்கு ஆகும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதில் நவீன இயந்திரம் மூலம் தான் மது அருந்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கிறோம். 6 மணி நேரத்திற்கு முன்பு அல்லது நேற்றைய தினம் மது அருந்தி இருந்தால் கூட இயந்திரம் மூலம் கண்டுபிடித்து விடலாம். 3 மாதத்துக்கு முன் வாங்கிய இயந்திரம் தான் காவல்துறையினர் பயன்படுத்தி வருகிறார்கள், புகார் மீது விசாரணை நடத்தப்படும். இயந்திரத்தில் தவறு என்றால் நிச்சயம் விசாரிப்போம்.
மேலும், விசாரணை கைதிகளிடம் காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறோம். காவல் நிலையத்தில் சிறையில் இருக்கும் கைதிகளின் நிலவரத்தைத் தினமும் இரவு கேட்டு வருகிறோம். கடந்த 5 மாதங்களாகத் தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் இல்லை" எனவும் தெரிவித்தார்.