சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நேற்று (ஏப்.4) ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டை மூலம் கேள்வி எழுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, "ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின் படி பாஜகவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து ஏப்ரல் 1 முதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சத்யாகிரக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இன்றைய அஞ்சல் அட்டை போராட்டத்தின் மூலம் ராகுல் காந்தி பொது வெளியில் மற்றும் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளை தமிழக இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் பிரதமருக்கு கேட்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த எத்தனை ஒப்பந்தங்கள் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது? பாஜக ஆட்சியில் இருக்கும் பொழுது அதானி பணக்கார பட்டியலில் 2 இடத்திற்கு வந்த மந்திரத்தை எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்? உள்ளிட்ட கேள்விகள் இந்த அஞ்சல் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
2 அவைகளும் நடைபெறாமல் உள்ளது ஏனென்றால் நடைபெற்றால் கேள்வி கேட்கிறார்கள் அதனால் இரு அவைகளும் நடைபெறாமல் உள்ளது. இதற்கு 6 நிமிடத்தில் பதில் சொல்லிவிடலாம். மோடி படிக்கும் பொழுதும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை, ஆட்சி செய்யும் பொழுதும் பதில் சொல்லவில்லை.
இன்று 1000 கடிதங்கள் அனுப்ப இருக்கிறோம். அடுத்தடுத்து மாணவர் காங்கிரஸ் அணி தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும். இதை தவிர மாநில அரசின் அனுமதி இல்லாமல் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கூட்டாட்சி முறையில் மத்திய அரசுக்கு இணையான அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. நேரடியான டெல்லி அரசு இது அல்ல, ஒன்றியங்களின் அரசு இது.
கலாஷேத்ரா மிகவும் அற்புதமான இடம். அங்கிருந்து வரும் செய்திகள் மனதிற்கு சங்கடம் தருகிறது. அங்கு நடைபெற்றுள்ள பாலியல் புகார் விவகாரத்தை இந்திய கலாச்சாரத்தின் சீர் அழிவாக பார்க்கிறேன். எனவே உண்மை நிலவரத்தை அரசு கண்டுபிடிக்க வேண்டும். வதந்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. மக்களுக்கு கலாஷேத்திரா விவகாரம் தொடர்பான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் வன்முறையை விரும்பாத கட்சி. கன்னியாகுமரியில் போராட்டம் நடைபெறும் பொழுது பாஜக அலுவலகம் வழியாக செல்லும் பொழுது பாஜக அலுவலகத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காங்கிரசின் கொடி எரிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டும்" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறையின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் அமைப்பினர் பேரணியாக சென்று பாஜக மற்றும் மோடிக்கு எதிரான விளக்கங்களை எழுப்பி அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
இதையும் படிங்க: ரயில் விபத்தை தவிர்த்த மூதாட்டி - கர்நாடகாவின் சிங்கப்பெண்!