தமிழ்நாட்டில் நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக சில மாவட்டங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. இந்த சேதங்களை எதிா்கொள்ள சுமாா் 3,700 கோடிக்கும் அதிகமான தொகை தேவைப்படுவதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை-வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்திய குழு, கடந்த சனிக்கிழமை சென்னை வந்தனர். தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் பிறகு நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கள ஆய்வுகளை முடித்து சென்னை திரும்பிய மத்திய குழுவினா், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனையின் போது நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரங்களை மத்திய குழுவிடம் முதலமைச்சர் எடுத்துக் கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி விரைவில் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், மத்திய குழுவிடம் முதலமைச்சர் வைத்துள்ளார்.
இதையடுத்து ஓரிரு நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடத்திய ஆய்வுப் பணிகள் குறித்த அறிக்கையை மத்திய குழுவினர் உள்துறை அமைச்சகத்திடம் வழங்குவார்கள் என்றும், அந்த அறிக்கையின்படி மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு நிவாரண நிதியை விடுவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை முடிந்த நிலையில், கடலூா், சிதம்பரம், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை-வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க:புயல், மழை சேத கணக்கெடுப்பை தொடங்கிய மத்தியக் குழு!