சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் திமுக சார்பாக பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கோபாலபுரம் இல்லத்திலுள்ள கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார்.
அதேபோல் கோபாலபுரம் அருகாமையிலுள்ள குடியிருப்பு வாசிகளிடமும், தொண்டர்களிடமும் வாழ்த்துகள் பெற்றார். பின்பு கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென தனது வாகனத்திலுருந்து ஆர்.கே சாலையில் இறங்கினார். பிறகு சில நிமிடங்கள் அங்கு காத்திருந்து; மகளிர் இலவச பேருந்தில் ஏறினார் (White Board). பேருந்தில் ஏறிய முதலமைச்சர் அங்கிருந்து பயணிகளிடம் உரையாடினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பெண்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முறையாக இலவச டிக்கெட் வழங்கப்படுகிறதா? என நடத்துநரிடம் கேட்டறிந்தார். அதற்காக தனித்தனி வண்ணங்களில் டிக்கெட்டுகள் கையில் வைத்திருக்கிறீர்களா? என வாங்கி சோதனை செய்தார். மேலும் பேருந்தில் பயணித்த பெண் பயணிகளிடம் தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா? எனக் கேட்டறிந்தார்.
![கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15219432_im.jpg)
இந்த வழி தடத்தில் (29C பெரம்பூர் டு பெசன்ட் நகர்) குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாக முதலமைச்சரிடம் பெண்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார். அப்போது தன் பள்ளி நாள்களில் பேருந்தில் பயணித்ததை நினைவுகூர்ந்த முதலமைச்சர், சேத்துப்பட்டு MCC பள்ளியில் படித்த காலத்தில் ஸ்டெர்லிங் ரோட்டில் இறங்கி ஹாரிங்டன் சாலை வரை நடந்தே செல்வேன் எனக் கூறினார்.
![புத்தகத்தை வெளியிட்ட ஸ்டாலின்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15219432_imsd.jpg)
இதைத்தொடர்ந்து பேருந்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு மரக்கன்றுகள் நட்டார். பின்னர் தலைமைச் செயலகம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை வெளியிட்டார்.
இதையும் படிங்க: தமிழில் 'திராவிட மாதிரி' எனச் சொன்னால் நன்றாக இருக்கும் - தமிழிசை