சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 2023-24ம் நிதியாண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
தமிழ்நாடு பொது நிதி நிலை அறிக்கையைப் பொறுத்தவரை, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இந்தாண்டு அறிவிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களுக்கும் அடுத்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாநில பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காகத் தமிழக அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்குக் கூடுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், பெண்களுக்கு ரூ.1000 நிதி உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கு நிதி ஒப்புதல் மற்றும் தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல் ஆகியவை அளிக்கப்படுகிறது.
மேலும், ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் மூன்று மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டு நேற்று தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.எனவே இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.