சென்னை: பஞ்சமி நில மீட்பு, பட்டியலின கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாதது உள்ளிட்டவற்றை குறித்து பாஜக தலைவர் வி.பி துரைசாமி தலைமையில், மாநில பட்டியலின தலைவர் தடா பெரியசாமி, பட்டியலின மாநில பொறுப்பாளர் பொன்.வி.பால கணபதி, பட்டியலின மாநில பொது செயலாளர் அரசு ரங்கேஷ், என்.எல்.நாகராஜ், ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஏப்ரல் 25(செவ்வாய்கிழமை) மாலை மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பட்டியல் இன தலைவர் தடா பெரியசாமி, "பஞ்சமி நிலத்தினை மீட்டு பாதுகாத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு மாநிலத்தில் உள்ள பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியினை(SCSP) தமிழக அரசு செலவு செய்யாததை கண்டித்து புகார் மனுவும், தமிழக முதலமைச்சர், பட்டியல் சமூகத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மதமாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய புகார்களை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கினோம். மூன்று புகார்கள் கொடுத்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பட்டியல் சமுதாயத்தில் இருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு, இட ஒதுக்கீடு பொருந்தும் என்கிற தீர்மானத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். கிறிஸ்தவர்களை வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.11,442 கோடி ரூபாய் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கியும், 10,000 கோடி செலவு செய்யவில்லை. பட்டியல் சமூக மக்களுக்கான விடுதி எவ்வளவு மோசமாக உள்ளது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள் எதுவும் இந்த திராவிட அரசு செய்து கொடுக்கவில்லை" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், "பஞ்சமி நிலம் மீட்பு நடவடிக்கை அவசியம். மற்ற மாநிலங்கள் போல, இங்கும் பஞ்சமி நில சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சிறப்புச் சட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது நிறைவேற்றவில்லை. என்ன காரணம் என திமுக தான் கூற வேண்டும். சமத்துவபுரம் என்கிற பெயரில் கடந்த காலத்தில் திமுக ஏமாற்றியுள்ளது. பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அனைத்து மக்களுக்கும் கொடுத்தது தவறு. தாழ்த்தப்பட்ட மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்துள்ளோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக மண்டல் கமிஷனில் ஏற்கனவே இருக்கும்போது ஏன்? தனியாக கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன் மூலம் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என தடா பெரியசாமி குற்றம்சாட்டினார்.