சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஜன.12) மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் தனித் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இத்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
அப்போது தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேது சமுத்திரத் திட்டம் பற்றி தீர்மானம் கொண்டு வந்தால், அதைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றும், இங்கு ராமர், ராமாயணத்தைப் பற்றி சிலர் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுபோல தெய்வ வழிபாட்டை குறை சொல்வதைக் கேட்க முடியாது என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மதத்தைப் பற்றியோ, தெய்வத்தையோ குறை சொல்லி யாரும் பேசவில்லை. தெய்வங்கள் பெயரை சொல்லி சில திட்டங்களைக் கொண்டு வந்ததாகப் பேசினார்கள்" என்று கூறினார்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், "சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்களை விட மகிழ்ச்சி அடைவது யாரும் இல்லை. அதை விட ஒரு சந்தோஷமான நிகழ்ச்சி எதுவும் இல்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் ஆய்வுகள் செய்யப்பட்டு, மன்மோகன் சிங் காலத்தில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
முதலமைச்சர் கொண்டு வந்த சேது சமுத்திரத் திட்டத்தின் தனி தீர்மானத்தை பாஜக ஆதரிக்கிறது. அதேநேரம், தெய்வமாக வழிபடும் ராமர் பாலத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சேது சமுத்திர திட்டம் தேவை: சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!