சென்னை : காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப் பேரவை இன்று (அக்.9) காலை கூடியது. முதலில், முன்னாள் உறுப்பினா்கள் இ.ஏ.லியாவுதீன் சேட், கே.பழனியம்மாள், வெ.அ.ஆண்டமுத்து ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ப.சபாநாயகம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கும் அவையில் இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது.
தொடா்ந்து, கேள்வி பதில் நேரம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதித்தனர். தொடர்ந்து தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தும் தனி தீா்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
தொடர்ந்து இந்த தீா்மானத்தின் மீது அதிமுக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சோ்ந்த தலைவா்கள் கருத்துகளை முன்வைத்து உரையாற்றினர். தொடர்ந்து, தனித் தீா்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக காவிரி விவகாரத்தில் அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதேநேரம் தனி தீர்மானம் இரட்டை அலகில் இருப்பதாக கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.