சென்னை: பறையர் பேரவை அமைப்பு நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று(ஏப்ரல் 26) புகார் ஒன்றினை அளித்தார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, " 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் வெளியான நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இதில், அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளதற்கு இளையராஜா மீது பலர் வன்மமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அந்த நூலில் அம்பேத்கரின் திட்டங்களை மோடி நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். நூலை படிக்காமல், சிலர் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசியிருப்பதாகக்கூறி இளையராஜாவை இழிவாகப்பேசி வருவது கண்டனத்துக்குரியது.
இதே போல் அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் இளையராஜா குறித்து சாதி ரீதியாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் மோடியின் மீதுள்ள வெறுப்பை இளையராஜா மீது காட்டி வருகின்றனர்.
இளையராஜா குறித்து சாதி ரீதியாக விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்கும் போராட்டம் நடத்தப்படும்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'அம்பேத்கர், மோடி கரங்களை பற்றிக் கொண்டு நிற்கும் இளையராஜா' - பாஜக அதிரடி போஸ்டர்