சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதில் 178 வகையான 2300 வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி என்கிற இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் யானைகள் இருப்பிடம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் இந்திய லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் யானைகள் இருப்பிட முழு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த சமூக பாதுகாப்பு திட்டத்தில் நிதி வழங்கியுள்ளனர்.
இத்திட்டத்தில் யானைகளுக்கான 'கிரால்' கால்நடை மருத்துவ வசதிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு உணவு சமைப்பதற்கு சமையலறை, யானைகள் பராமரிப்பாளர்களுக்கு தங்கும் வீடு, யானைகள் குளிப்பதற்கு வசதியாக ஸ்விம்மிங் பூல் மற்றும் தண்ணீர் தெளிப்பான் (shower) மாற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
யானைகள் இருப்பிடங்களிலிருந்த புதர்கள் அகற்றப்பட்டு அகழி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஏக்கர் அளவில் யானைகளுக்கான தீவனத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அனைத்து வசதிகளும் யானைகளுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனவும், இந்த தொட்டியில் குதித்து விளையாடும் யானைகளை பார்வையாளர்களும் நேரில் கண்டு மகிழலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் "டிஜிட்டல் அவதார்" - மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!