சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் உள்ள செராமிக் ஆலையில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் படுகாயம் அடைந்ததாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆலையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்து மோசமடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. ஏழு இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் நால்வர் மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரத்தில், உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!