சென்னை: அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைப்பது தான் தங்களின் நோக்கமாக இருப்பதால், இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தவர்களையும் தேர்வு எழுத அனுமதி என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிக்கு வருகைப் புரிய வேண்டும். அந்த மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட நாட்கள் வருகைப்பதிவேடு இருக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, ”பெண் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை 51.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நீதி கட்சிக் காலத்தில் இருந்தே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
நீதிக்கட்சி ஆட்சியில் தான் முதன்முதலில் மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை விரிவுபடுத்தியவர் காமராஜர், அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் மதிய உணவு திட்டத்தில் பல மாற்றங்கள் செய்தனர்.
ஆனால், இப்போது, காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திருக்கின்றனர்.
பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு என்பதை கொண்டு வந்ததும் திமுக தான். அதேபாேல் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை நீதி கட்சிக் காலத்திலேயே அமல்படுத்தப்பட்டது. அந்த அரசாணையில் முற்போக்கு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதான் சமூக நீதியாகும்.
பொதுத்தேர்வில் ஐம்பதாயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். அதற்காக தான் குறிப்பிட்ட கல்வியாண்டில் இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தவர்களைக்கூட பொது தேர்வுக்கு அனுமதி வழங்கி இருக்கிறோம்.
மாணவர்கள் ஒரு காலத்தில் தன்னைத்தேர்வு எழுத அனுமதிக்காததால் படிக்காமல் விட்டு விட்டதாக கூறக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவினை எடுத்தோம். இதைப் போல் தொடர்ந்து அனுமதிப்போம். இது தொடர்பாக தங்களை கேலி செய்பவர்கள், தேர்வு முடிவுக்குப் பிறகு பாராட்டுவார்கள்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "நாட்டின் மெகா திட்டங்களை விரைவுபடுத்துவதில் அயலகப் பணியாளர்கள் முக்கியப்பங்கு": ஐஐடி ஆய்வு சொல்வது என்ன?