இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வித் துறை, தொடக்ககல்வித் துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
'ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் அவர்களது பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு முன்னர் தொற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கற்பிப்பது குறித்து மாணவர்கள், பெற்றோருக்கு, ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். மாணவர்களின் உடல்நலத்தினை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் தங்கள் உடல் சீரான இடைவெளியில் நீட்டவும், சுழற்றவும், அடிக்கடி கண்களை சிமிட்டவும், மின்னணு உபகரண சாதனங்களை சரியான நிலையில் வைத்து உபயோகிக்கவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி வழங்குவதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ற கூடுதல் வகுப்புகளை நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்கள் மற்றும் மதிப்பெண்கள் ஏதும் தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு கட்டாயமாக்கப்படாது.
குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு தேவையான சாதனங்கள் (கம்ப்யூட்டர் அல்லது மொபைல்) மற்றும் இணைப்பு வசதிகள் உருவாகும் வரை குழந்தைகளின் வகுப்புகளில் பங்கேற்கிறார்களா? இல்லையா? என்பதை முடிவெடுப்பதற்கு பெற்றோருக்கு முழுமையான அதிகாரம் உண்டு.
எந்த ஒரு ஆன்லைன் வகுப்புகளிலும் எவரும் எந்த குழந்தைகளிடமும், கலந்து கொள்வது கட்டாயம், வருகை கணக்கிடப்படும், மதிப்பெண்கள் மதிப்பீடு ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் என கூறி நிர்ப்பந்திக்கக் கூடாது.
குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடந்தால், அவர்களுக்கு சாதனங்களின் பற்றாக்குறை இருப்பின் மூத்த குழந்தை அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார்களை பெற்றோர் மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் grievancesredressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் மன அழுத்தம் அல்லது பதட்டம் தொடர்பான ஆலோசனையைப் பெற 14417 என்ற பள்ளிக்கல்வித் துறையின் ஆலோசனை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பழங்கால பொருள்களை தேடிதேடி தனதாக்கும் கேமரா காதலன்!