சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரின் உத்தரவின் பேரில், சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடை எண்: 652-இல் தலைமை அலுவலக அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடையில், விற்பனையாளர்களாக பணிபுரியும் பாஸ்கர் மற்றும் சின்னராசு ஆகிய இரண்டு பணியாளர்களும் அரசின் உத்தரவினை மீறி மதுபானங்கள் மீது கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மேற்படி பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வேறு கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும், அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது.
கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடத்தினுள் மது அருந்தவோ, திண்பண்டங்கள் விற்பனை செய்யவோ கூடாது.
சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்கள் மொத்த விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: எளிமைதான் நேர்மையான வாழ்க்கைக்கு அச்சாணி - பிடிஆர்